சிவம் துபே-ல்லாம் ஆல்ரவுண்டர்னா நானும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தான்.. ஸ்ரீகாந்த் கிண்டல்
மும்பை: 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு, ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக சிவம் துபே மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக கருத முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருவதால், இந்திய அணி மாற்று வழி அல்லது பிளேயிங் லெவனில் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரைத் தேடி வருகிறது. இந்த பட்டியலில் நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் முக்கியமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "துபே மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற வீரர்களை ஆல் ரவுண்டர்கள் என்று சொல்ல முடியாது. இவர்களை ஆல்-ரவுண்டர்கள் என்று அழைத்தால், என்னை நானே ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் என்று சொல்லிக் கொள்வேன். ஹர்திக் பாண்டியா மட்டுமே உண்மையான ஆல்-ரவுண்டர். நிதிஷ் குமார் ரெட்டி ஒரு பாதி ஆல்-ரவுண்டர் தான். அவர் 7வது வரிசையில் பேட்டிங் செய்து சில ஓவர்களை வீசக்கூடியவர்" என்றார்.
ஹர்திக், ஹர்ஷித் மற்றும் நிதிஷ் ஆகியோரின் காயங்கள் காரணமாக, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் சிவம் துபே இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக விளையாடினார். அவர் இரண்டு போட்டிகளில் ஐந்துக்கும் குறைவான எகானமியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பேட்டிங்கில் கிடைத்த ஒரே வாய்ப்பில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த் "விராட் கோலியின் மிகச்சிறந்த விஷயமே அவருக்குத் தன்னுடய பலம் என்னவென்று தெரியும் என்பதுதான். அவர் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகம் அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் மிகவும் அர்ப்பணிப்புள்ள ஒரு கிரிக்கெட் வீரர். விராட் கோலி என்ற ஒரு மனிதரால் தான் ஆர்சிபி அணி அடுத்தடுத்து பட்டங்களை வென்றுள்ளது."
"அணியில் யாருக்கும் இடம் உறுதி செய்யப்படவில்லை என்று அணி நிர்வாகமும் கம்பீரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனவே, ரோஹித் சர்மா தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து ரன்களைக் குவித்தால், அவரே உலகக் கோப்பையில் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். அவரது அதிரடியான தொடக்கம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது."
"ஜெய்ஸ்வால் தனது கடைசி மூன்று ஒருநாள் இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சதங்களை விளாசியுள்ளார். அவர் மிகவும் திறன்மையானவர், எனவே இந்தியாவின் மாற்று பேட்ஸ்மேனுக்கான முன்னுரிமை அவருக்குத்தான் வழங்கப்பட வேண்டும்" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.


Click it and Unblock the Notifications

