சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு தோனிக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட் கைகளுக்கு வந்துள்ளது. கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக வழிநடத்தியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. இதனால் ருதுராஜ் கெய்க்வாடை சிஎஸ்கே ரசிகர்களும், தோனியின் ரசிகர்களும் "தல" தோனியின் சிஷ்யனாகவே கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே தோனியின் 43வது பிறந்தநாள் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சரியாக 49 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார். இதனை ரசிகர்கள் பலரும் தோனியின் பிறந்தநாளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் சம்பவம் செய்துவிட்டார் என்றும், Thala for a Reason என்றும் கொண்டாடினர். இது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.

இதன்பின் 3வது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களை சேர்த்தார். இதனை நம்பர் 7ஐ கொண்டு பெருக்கினால் 49 வரும் என்பதால், மீண்டும் Thala for a Reason ரசிகர்கள் பலரும் ஜாலியாக பதிவிட தொடங்கினர். இந்த ட்ரெண்டில் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து கொண்டார். அவரின் கேப் நம்பரான 88ஐ பதிவிட்டு, 8+8 =16, அந்த 16ல் 1+6 = 7 என்று பதிவிட்டு, உங்கள் ட்ரெண்டிற்கு முன் செல்கிறேன் என்று ஜாலியாக பதிவிட்டார்.
இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். இந்த விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ஜிம்பாப்வே டி20 தொடர் மூலமாக இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பை தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலீல் அஹ்மத், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என்று ஏற்கனவே நீண்ட நாட்களாக இந்திய அணியின் செட்டப்பில் இருந்தவர்கள். அதேபோல் டாப் 4ல் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இதில் அபிஷேக் சர்மாவுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. கில் மற்றும் ருதுராஜ் இருவருக்கும் ஒரு ரோல் கொடுத்துள்ளனர்.
அந்த ரோலுக்கு ஏற்ப மிகச்சிறந்த ஆட்டத்தை இருவரும் விளையாடி வருகின்றனர். அதேபோல் ருதுராஜின் இன்னிங்ஸை வைத்து Thala for a Reason என்று ரசிகர்கள் பலரும் எமோஷனலாக பேசி வருகின்றனர். இந்த ட்ரெட் மூலமாக ருதுராஜ் கிண்டல் செய்துள்ளார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீரரையும் அவர்களின் சுதந்திரத்திற்கு விளையாட அனுமதித்து ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.