ஹராரே: 10 ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்று போராடி வருபவர் சஞ்சு சாம்சன். 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியில் இடம்பிடித்தாலும், சஞ்சு சாம்சன் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த நிலையில் முதல்முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்தார்.
கிட்டத்தட்ட ரோகித் சர்மா பாணியிலான பேட்டிங்கை சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக செய்து வந்ததன் பலனை சஞ்சு சாம்சனுக்கு கிடைத்துள்ளது. டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்றாலும், இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்து வந்தார். இதன் காரணமாகவே ஜிம்பாப்வே டி20 தொடருக்கும் சஞ்சு சாம்சன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் விளாசிய அபார சதம் தேர்வு குழுவினரை ஈர்த்துள்ளது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நுணுக்கத்தை சஞ்சு சாம்சன் அறிந்ததை டி20 கிரிக்கெட்டிலும் நிலைத்து நின்ற விளையாட பயன்படுத்தி அசத்தி வருகிறார். இதனால் டாப் 4 இடங்களில் இந்திய அணியின் முதன்மை வீரராக சஞ்சு சாம்சன் உருவாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் இனி சஞ்சு சாம்சனுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று பார்க்கப்பட்டாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயருக்கான நேரடி மாற்று வீரராக காணப்படுகிறார். இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மிகப்பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினாலே, சஞ்சு சாம்சனால் தவிர்க்க முடியாத வீரராக உருவாக முடியும்.
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய 4 விக்கெட் கீப்பர்கள் தான் இந்திய தேர்வு குழுவினரின் முதன்மை சாய்ஸாக உள்ளனர். இதில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் ரோல் தெளிவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷனை போல் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் அமைதி காத்து சரியான நேரத்திற்காக சஞ்சு சாம்சன் காத்திருந்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சனின் அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடிப்பது மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது.