சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி 256 ரன்கள் குவித்த போதிலும், பந்துவீச்சில் பகுதிநேர பந்துவீச்சாளரான சிவம் துபே செய்த செயல் இந்திய அணிக்கு தேவையில்லாத பின்னடைவை ஏற்படுத்தியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. பின்னர் 257 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடியது.

ஆரம்பம் முதலே இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகளைத் தொடர்ந்து வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பிரையன் பென்னட் மட்டும் ஒருபுறம் தனி ஆளாகப் போராடினார். ஜிம்பாப்வே அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, ஆட்டத்தின் 15வது ஓவரை வீச கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிவம் துபேவை அழைத்தார்.
அந்த ஓவரில் சிவம் துபே வைடு, நோ பால் எனத் தொடர்ந்து தவறுகளைச் செய்தார். அந்த ஒரே ஓவரில் மட்டும் 26 ரன்களை அவர் வாரி வழங்கினார். அதன்பின் ஆட்டத்தின் கடைசி ஓவரான 20வது ஓவரையும் அவரே வீசினார். அந்த ஓவரிலும் அவரது பந்துவீச்சை ஜிம்பாப்வே பேட்டர்கள் எளிதாக பவுண்டரிகளுக்கு விரட்டினர். அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தான் வீசிய 2 ஓவர்களில் 46 ரன்களைச் செலவிட்டு ஒரு விக்கெட்டை மட்டுமே அவர் வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களிலேயே 46 ரன்களை வாரி வழங்கியது இதுவே முதல்முறையாகும். இந்த வேண்டாத சாதனையை சிவம் துபே தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இந்திய அணி ஜிம்பாப்வேயை 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வீழ்த்தி நெட் ரன் ரேட்டை பெரிய அளவில் உயர்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், சிவம் துபே வீசிய இந்த இரண்டு ஓவர்களால் ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் 184 ரன்களை எட்டியது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி, 72 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாகக் குறைந்தது. தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதால் தற்போது இந்திய அணிக்கு நெட் ரன் ரேட் குறித்த பெரிய அழுத்தம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டம் ஒருவேளை மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால், அரையிறுதிக்குச் செல்லும் அணியை முடிவு செய்வதில் நெட் ரன் ரேட் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
அந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானால், ஜிம்பாப்வே அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தாமல் கோட்டை விட்டது இந்திய அணிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என சில ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு தலா ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் சிவம் துபேவுக்கு ஏன் ஓவர்கள் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பகுதிநேர பந்துவீச்சாளரான சிவம் துபேவின் இந்த மோசமான பந்துவீச்சு இணையத்தில் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்திய பேட்டர்களின் அதிரடியால் நெட் ரன் ரேட் -0.1 என்பதாக மாறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.