மும்பை : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாசை வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனனின் அதிரடி அரை சதத்தால் ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
இதன் அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவரில் 125 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

கேப்டனாக களம் இறங்கி முதல் கோப்பையை கில் வென்றிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தொடர் மிகவும் பிரமாதமாக இருந்தது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு அடுத்தடுத்து நாங்கள் வெற்றியை பெற்றிருக்கிறோம். எங்கள் அணி வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
தங்கள் அணி வீரர்கள்கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பல வீரர்கள் நீண்ட தூரம் விமானத்தின் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறார்கள். ஜிம்பாப்வேவில் உள்ள கள சூழல்கள் பல பேருக்கு புதுமையாக இருந்திருக்கும். எனினும் புதிய சூழலில் எதிர் கொண்டு அதற்கு ஏற்றார் போல் தங்களை மாற்றி விளையாடி இருக்கிறார்கள். அடுத்தது இலங்கை எதிரான தொடர் இருக்கின்றது.
நான் ஒரு முறை ஆசிய கோப்பை போட்டிக்காக இலங்கை சென்று இருக்கின்றேன். அந்த தொடரை நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கில் கூறியுள்ளார். இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இதில் சாம்பியன் பட்டத்தை வென்றாலும் சில தவறுகளை அவர் செய்திருப்பது அவருக்கு மோசமான பெயரை பெற்று கொடுத்திருக்கிறது.
அதாவது ஜெய்ஸ்வால் சதம் அடிக்க வாய்ப்பு கொடுக்காமல் வீணடித்தது, கடைசி டி20 போட்டியில் ருதுராஜை அணியை விட்டு நீக்கியது. மேலும் அபிஷேக் ஷர்மா சதம் அடித்தும் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்காமல் தாமே தொடக்க வீரராக களமிறங்கியது போன்ற தவறுகளில் கில் ஈடுபட்டது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று இருக்கிறது.