IND vs ZIM: இனி சிக்ஸ் அடிக்கவே மாட்டேன்.. உடைந்து போன அபிஷேக்.. தந்தை வார்த்தையால் நடந்த மேஜிக்
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்தார். தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே அவர் சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். ஆனால், முதல் டி20 போட்டியில் அவர் டக் அவுட் ஆகி இருந்தார்.
அப்போது அவர் மனம் உடைந்து போனதாகவும், அவரது தந்தை அவருக்கு சில ஆறுதல் வார்த்தைகள் கூறி அவரது மனநிலையை மாற்றியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா அளித்த பேட்டியில், அபிஷேக் சர்மா இனி சிக்ஸ் அடிக்க கூடாது என்ற முடிவுக்கு வந்ததாகவும், அதனால்தான் ஆட்டம் இழந்து விட்டோம் என உடைந்து போயிருந்ததாகவும், அதன் பின் தான் எதற்காக அவரை அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்தியதாகவும் கூறி இருந்தார்.

இது குறித்து ராஜ்குமார் சர்மா அளித்த பேட்டியில், "முதல் போட்டியில் டக் அவுட் ஆன பின் அபிஷேக் சர்மா மிகவும் ஏமாற்றத்தில் இருந்தார். அவரை குறை சொல்ல முடியாது. உங்கள் அறிமுக போட்டியில் நீங்கள் இதுபோல அவுட் ஆனால் நிச்சயமாக உங்களது அணுகுமுறையை நீங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வீர்கள். சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற தனது ஆவேசமே டக் அவுட் ஆனதற்கு காரணம் என நினைத்தார். தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தார். ஆனால், நான் அவரிடம், 'உனது சிக்ஸ் அடிக்கும் திறமையை பார்த்து தான் அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள். அதனால் தான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறாய்" என்பதை நினைவு படுத்தினேன். எனவே, 'உனது ஆட்டத்தை நீ ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் உனது பலம். அதை நீ தக்க வைத்துக் கொள்' என்று கூறினேன்" என்றார்.

மேலும், "கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் லக்ஷ்மன் அபிஷேக் உடன் பேசினார்கள். லக்ஷ்மன் அவரிடம், "ஐபிஎல் தொடரில் நீ சர்வதேச பந்து வீச்சாளர்களை அடித்து தள்ளி இருக்கிறாய். எனவே, இந்த போட்டியையும் ஐபிஎல் போலவே நினைத்துக் கொள். உனக்கான நேரத்தை எடுத்துக் கொள். சூழ்நிலையை உணர்ந்து கொள். அதன்பின் உன்னை யாராலும் தடுக்க முடியாது" என்று கூறினார்." என்றார்.
"சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா அண்டர் 14 நாட்களில் இருந்து பஞ்சாப் அணிக்காக ஒன்றாக துவக்கம் அளித்து வந்தவர்கள். அதுவும் அபிஷேக் நன்றாக ஆடுவதற்கு உதவியது. எனது வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக எதிர்காலத்தில் மிகச் சிறந்த துவக்கத்தை அளிப்பார்கள்" என்றார் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா.
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 234 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.


Click it and Unblock the Notifications