ஹராரே: தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் 68 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய நிலையில் முதன்முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று இருக்கிறார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அதற்காக ஆட்டநாயகன் வென்றார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டநாயகன் விருதை வென்றது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்களும், ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 49 ரன்களும் குவித்தனர்.

அடுத்து ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. அந்த அணி துவக்கம் முதலே ரன் குவிக்கத் திணறியது. இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான கலீல் அகமத் மற்றும் ஆவேஷ் கான் பவர் பிளே ஓவர்களிலேயே அந்த அணியின் மூன்று விக்கெட்களை சாய்த்தனர். அதன் பின் மிடில் ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் அந்த அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதனால், அவர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர் வெல்லும் முதல் ஆட்டநாயகன் விருதாகும்.
இதுவரை அவர் 4 டெஸ்ட் போட்டிகள், 19 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 45 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். 2017 டிசம்பர் மாதம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 7 ஆண்டுகளாக 68 சர்வதேச போட்டிகளில் ஆடிய அவர் முதன்முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று இருக்கிறார்.
இது குறித்து நெகிழ்ச்சியோடு காணப்பட்ட வாஷிங்டன் சுந்தர், போட்டிக்கு பின் பேசிகையில், "நான் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் சிறப்பாக உணர்கிறேன். இது மிகவும் நல்ல உணர்வாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவருக்கு இணையான பேட்டிங் திறன் கொண்ட சுழற் பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இனி இந்திய டி20 அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான முதல் படியாக இந்த ஆட்டநாயகன் விருது அமைந்துள்ளது.