ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக சதம் அடித்த அபிஷேக் சர்மா இந்திய டி20 அணியின் நிரந்தர வீரராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், அவருக்கு அடுத்த போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.
தற்போது ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு துவக்க வீரர் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவருடன் அபிஷேக் சர்மா இணைந்து துவக்கம் அளித்து வருகிறார். மூன்றாம் வரிசையில் மற்றொரு துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் இறங்கி வருகிறார்.

இந்த நிலையில், முதல் இரண்டு டி20 போட்டிகளில் அணியில் இடம் பெறாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்க வேண்டி ஜிம்பாப்வே சென்றுள்ளார். தற்போது அவருக்கு அணியில் இடம் அளித்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர் 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தார். அவருக்கு அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மூத்த வீரர்கள் இல்லாத ஜிம்பாப்வே அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. அதற்காகவே அவர் உலகக் கோப்பை முடிந்தவுடன் ஓய்வின்றி ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜெய்ஸ்வால் துவக்க வீரர் என்பதால் சுப்மன் கில் அல்லது அபிஷேக் சர்மா ஆகிய இருவரில் ஒருவர் தங்கள் இடத்தை அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சுப்மன் கில் இந்த தொடரில் முதல் போட்டியில் 31 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் 2 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா முதல் போட்டியில் டக் அவுட் ஆனாலும், இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடி சதம் அடித்து இருக்கிறார். இந்த செயல்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால் சுப்மன் கில்லை நீக்க வேண்டும்.
ஆனால், அவர் அணியின் கேப்டன் என்பதால் அவரை நீக்க முடியாது. எனவே, சதம் அடித்த அபிஷேக் சர்மாவை நீக்கிவிட்டு அவரது இடத்தில் ஜெய்ஸ்வாலை ஆட வைக்கவே வாய்ப்புகள் அதிகம். ஜெய்ஸ்வால் நிச்சயம் மூன்றாவது வரிசையில் களமிறங்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.
சதம் அடித்தாலும் அதனால் எந்த பயனும் இல்லாமல் அபிஷேக் சர்மாவை நீக்கும் முடிவை இந்திய அணி எடுக்குமா? கடைசி நேரத்தில் அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய அளவில் மாற்றம் செய்து அபிஷேக் சர்மாவை ஆடவைக்கும் வாய்ப்புகளும் உள்ளது. தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கையில் தான் இந்த முடிவு உள்ளது.