IND vs ZIM: நான் டக் அவுட் ஆனதால் யுவராஜ் சிங் சந்தோஷப்பட்டார்.. அதிர வைத்த அபிஷேக் சர்மா
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகம் ஆனார் இளம் வீரர் அபிஷேக் சர்மா. அவர் இந்திய அணியின் துவக்க வீரராக அந்தப் போட்டியில் ஆடினார். அதில் அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும், அதற்கு அடுத்த போட்டியிலேயே அவர் 46 பந்துகளில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்தார்.
இந்த நிலையில், அபிஷேக் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி மற்றும் ஆலோசனை அளித்து வரும் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அவர் டக் அவுட் ஆனது குறித்து அதிர வைக்கும் கருத்து ஒன்றை கூறி இருக்கிறார். அது குறித்து அபிஷேக் சர்மா சதம் அடித்த பின் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பேசி இருக்கிறார்.

"யுவராஜ் சிங்கிடம் இடம் நேற்று நான் பேசினேன். நான் டக் அவுட் ஆனது குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது அவர், "இது ஒரு நல்ல ஆரம்பம்" என்று என்னிடம் கூறினார். இப்போது நான் சதம் அடித்து உள்ள நிலையில் அவர் நிச்சயம் இது குறித்து பெருமையாக உணர்வார் என்று நினைக்கிறேன். அவர் எனது குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்தான். இது எல்லாமே அவரால் தான்." என்று கூறி இருக்கிறார் அபிஷேக் சர்மா.
மேலும், "எனக்காக அவர் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகிறார். அவர் எனக்காக அனைத்து விஷயத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமல்ல. கிரிக்கெட்டுக்கு வெளியேயும் எனக்காக அவர் நேரத்தை செலவிட்டு உள்ளார்" என்றார் அபிஷேக் சர்மா.
மேலும் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடிக்க எவ்வாறு உதவினார் என்பது குறித்தும் விவரித்தார். "நாங்கள் முதல் போட்டியில் ஆடி முடித்த பின் இரண்டாவது போட்டி குறித்து சிந்திக்கவே எங்களுக்கு நேரமில்லை. ஏனெனில், அதற்கு அடுத்த நாளே இரண்டாவது போட்டியில் ஆட வேண்டி இருந்தது. அப்போது நான் ஒரு பந்துவீச்சாளரின் ஓவரில் அடித்து ஆட முயன்றேன். எனக்கு நன்றாக பவுண்டரி அடிக்க வந்தது. பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் பேசினேன். அவர், "உனக்கு இலகுவாக பந்து வந்தால் நீ அதை அடித்து ஆடு. எத்தனை பந்துகள் வீணாக போனாலும் அது பற்றி கவலை இல்லை. உனக்கு இலகுவாக பந்து வந்தால் மட்டுமே நீ ஆடு" என்றார்". இவ்வாறு அபிஷேக் சர்மா தான் சதம் அடித்தது குறித்து பேசினார்.


Click it and Unblock the Notifications