ஹராரே: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலியின் இடத்தை டி20 கிரிக்கெட்டில் நிரப்பும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தொடக்கத்தில் ரன் சேர்ப்பதில் சிரமத்தை சந்தித்த ருதுராஜ், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 77 ரன்களை விளாசினார்.
கிட்டத்தட்ட விராட் கோலியின் ஸ்டைலில் தான் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக அல்லாமல் நமபர் 3ல் களமிறங்கி இதுபோன்ற ஆட்டத்தை ருதுராஜ் கெய்க்வாட் விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலியின் இடத்தை ருதுராஜ் மூலம் இந்திய அணி நிரப்பலாம் என்று பார்க்கப்பட்டது.

இதுகுறித்து ரசிகர்களும் விவாதிக்க தொடங்கினர். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் இயற்கையாகவே டாப் ஆர்டர் வீரராக இருக்கிறார். விக்கெட்டுகள் சென்றால் நிலைத்து நின்று ஆடக் கூடிய வீரராகவும், ஸ்பின்னர்களை பொளந்து கட்டக் கூடிய வீரராகவும் இருப்பதால், நம்பர் 3ல் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நிரந்தரமாக இடம் கொடுக்க வேண்டும் என்று விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், விராட் கோலியின் இடத்தை நிரப்ப வேண்டும் என்ற சிந்தனை சரியானதல்ல. அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவதோ, அவரின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று பேசுவதோ தேவையில்லாத ஒன்றாகும். ஏனென்றால் அவரது இடத்தை நிரப்புவது எளிதான விஷயமல்ல. ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போதே நான் சொல்லி இருக்கிறேன்.
சிறந்த வீரர்களின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. என்னை பொறுத்தவரை என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சரியாக தொடங்க வேண்டும். நமது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தற்போதைய சிந்தனை. அடுத்தப் போட்டியில் மட்டுமே எனது கவனம் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு எப்படி பங்களிக்க முடியும் என்பதையே யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்ற போது, தோனியின் இடத்தை நிரப்புவதற்காக பொறுப்பேற்கவில்லை. யாராலும் யாரின் இடத்தையும் நிரப்ப முடியாது. என்னுடைய ஸ்டைலில் கேப்டன்சியை மேற்கொள்வேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.