சீனியர் வீரர்களை வேடிக்கை பார்க்க விட்டு அடித்த வைபவ் சூர்யவன்ஷி.. 15 ஓவர் வரை நின்று கெத்து ஆட்டம்
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில், மூத்த வீரர்களை வேடிக்கை பார்க்க வைத்து 15வது ஓவர் வரை நங்கூரம் போல் நின்று அதிரடி காட்டினார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அவர் 81 ரன்கள் விளாசி இந்திய அணி 192 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி நிலைத்து நின்று ரன் சேர்த்தார். எல்லா பந்திலும் சிக்ஸ் அடிக்க முயற்சிக்காமல் பந்துகளை கணித்து ஆடினார்.

அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் மறுமுனையில் நிதானமாக ஆடியபோது, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். தான் எதிர்கொண்ட 49 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்து மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி, 15வது ஓவரின் கடைசி பந்து வரை களத்தில் நின்று ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.
இஷான் கிஷனுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தார். இதில் இஷான் கிஷன் 29 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி காட்டினார் அவர் 14 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். திலக் வர்மா 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூத்த வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோர் பெரிதாக ரன் சேர்க்காத நிலையில் வைபவ் சூர்யவன்ஷி பொறுப்பாக 15 வது ஓவர் வரை நின்று ரன் குவித்தது பாராட்டுக்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
