மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது.
அந்தப் போட்டி நடைபெற்று வரும் மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட இருக்கைகள் மோசமாக இருந்தது பெரும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. பல ரசிகர்கள் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருவதோடு, பிசிசிஐ-யை கடுமையாக விளாசி வருகின்றனர்.

நான்கு நாட்கள் நடைபெறும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண குறிப்பிடத்தகுந்த அளவு ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர். கூட்டம் குறைவாகவே இருக்கும் என்பதால் மைதானத்தின் ஒரு பகுதியில் மட்டுமே ரசிகர்கள் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. மற்ற பகுதிகளை அடைத்து விட்டனர் மைதான அதிகாரிகள். அந்த குறிப்பிட்ட பகுதியில் அமர டிக்கெட் வாங்கித் தான் செல்ல வேண்டும்.
ஆனால், அந்த பகுதியில் இருந்த பல இருக்கைகள் பறவையின் எச்சத்தால் மூடப்பட்டு இருந்தது. அதை சாதாரணமாக காகிதம் வைத்தெல்லாம் துடைத்து விட முடியாது. அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. அது ஊழியர்கள் வைத்து சுத்தம் செய்யாமல் அப்படியே திறந்து விட்டு, அதற்கான டிக்கெட்டையும் விற்று இருந்தனர் வான்கடே மைதான அதிகாரிகள்.
டிக்கெட் வாங்கி உள்ளே வந்து பார்த்த பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, இருக்கைகள் குறித்து அங்கு இருந்த ஊழியர் ஒருவரிடம் புகார் அளித்தனர். ஆனால், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களை பறவை எச்சத்தில் அமருமாறு அந்த மைதான ஊழியர் அதிகாரமாக கூறினார். அதுதான் இதில் மிகக் கொடுமை. இதை அடுத்து ரசிகர்கள் மும்பை கிரிக்கெட் அமைப்பு மற்றும் பிசிசிஐ-யை கடுமையாக விளாசி வருகிறார்கள்.
உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பு என பெயர் இருந்தும், இப்படித் தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவீர்களா? என சாமானிய ரசிகர்கள் குரல் எழுப்பி உள்ளனர்.
முன்பு 2023 உலகக்கோப்பை தொடரின் போது ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்திலும் இதே போல இருக்கைகள் பறவை எச்சத்துடன் இருந்தது. கடைசி வரை அதை சுத்தம் செய்யாமலே உலகக்கோப்பை போட்டிகள் அங்கே நடந்தன. இத்தனைக்கும் ஒவ்வொரு இருக்கைக்கும் சில ஆயிரங்கள் டிக்கெட் கட்டணம் வாங்கப்படுகிறது. ஆனால், குறைந்த பட்சம் அதை சுத்தம் செய்யக் கூட அவர்கள் மறுப்பது தான் ரசிகர்களின் கோபத்துக்கு காரணம்.
இந்த சம்பவங்கள் ஒருபுறம் நடக்க, போட்டியில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 409 ரன்கள் குவித்தது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது அந்த அணி. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.