கிரிக்கெட்டின் தாயகத்தில் முதல் டெஸ்ட் சதம் அடித்த பெண்.. இந்திய வீராங்கனை யஸ்திகா பாட்டியா சாதனை
லண்டன்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட்டின் தாயகம் என கூறப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் விளையாடிய யஸ்திகா பாட்டியா 145 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எட்டினார்.
சதம் அடித்தவுடன் மைதானத்தில் மண்டியிட்டு, நெற்றியை ஆடுகளத்தில் தொட்டு வணங்கி தனது நன்றியைத் தெரிவித்தார்.

தனது முதல் சதம் என்பதோடு லார்ட்ஸ் மைதானத்தில் பெண் ஒருவர் அடித்த முதல் சதம் என்ற பெருமையையும் பெற்றார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தின் கௌரவப் பலகையில் இடம் பிடித்துள்ள அவருக்கு, இந்திய அணியினர் மட்டுமின்றி இங்கிலாந்து வீரர்களும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு தெரிவித்தனர். இறுதியில் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
யஸ்திகா பாட்டியாவின் இந்த அதிரடி சதம் பல்வேறு சாதனைகளைத் தகர்த்துள்ளது. மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது அல்லது 4வது இன்னிங்ஸில் இந்திய வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 1985ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சந்தியா அகர்வால் 98 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த இந்திய இடது கை பேட்டர்களின் பட்டியலில் சவுரவ் கங்குலிக்கு அடுத்து 2வது இடத்தை யஸ்திகா பிடித்துள்ளார். கங்குலி 1996ஆம் ஆண்டு தனது அறிமுக டெஸ்டில் இங்கு 131 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யஸ்திகாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தப் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய மகளிர் அணி 285 ரன்களும், இங்கிலாந்து மகளிர் அணி 170 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இங்கிலாந்து மகளிர் அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.


Click it and Unblock the Notifications
