உலகக் கோப்பையில் சரித்திரம் படைத்த ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் ஜோடி.. 6 சாதனைகள் தகர்ப்பு
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இமாலயப் பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளனர். இந்த ஜோடி, 212 ரன்கள் குவித்து, ஒரே போட்டியில் 6 முக்கிய சாதனைகளை முறியடித்துள்ளது.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நவி மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் சரித்திரம் படைத்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா (95 பந்துகளில் 109 ரன்கள்), பிரதிகா ராவலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இந்த ஜோடி பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளது. இவர்கள் அதிரடியால் இந்திய அணி 49 ஓவர்களில் 340 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 271 ரன்களே எடுத்ததை அடுத்து இந்தியா டிஎல்எஸ் முறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தகர்க்கப்பட்ட 6 முக்கிய சாதனைகளின் பட்டியல்:
உலகக் கோப்பையில் இந்தியாவின் இமாலயப் பார்ட்னர்ஷிப்:
இந்த 212 ரன்கள் பார்ட்னர்ஷிப், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக எந்தவொரு விக்கெட்டுக்கும் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
உலகக் கோப்பையில் சிறந்த தொடக்க ஜோடி:
உலகக் கோப்பையில் இந்தியாவிற்கான சிறந்த தொடக்க ஜோடி என்ற சாதனையையும் இந்த இணை வசப்படுத்தியது. இதற்கு முந்தைய சாதனையாக 2013-ல் திருஷ் காமினி மற்றும் பூனம் ரவுத் ஜோடி அடித்த 175 ரன்கள் இருந்தது.
சச்சின் - கங்குலிக்கு அடுத்த இடம்:
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட), ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப் பட்டியலில் இந்த ஜோடி உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் இதுவரை 1,557 ரன்களைக் குவித்துள்ள இவர்கள், 1998-ல் சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி குவித்த 1,635 ரன்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
இரட்டை 200+ பார்ட்னர்ஷிப் கிளப்பில் இணைந்தனர்:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த உலகின் நான்காவது ஜோடி என்ற பெருமையை ஸ்மிருதி - பிரதிகா இணை பெற்றுள்ளது.
ஒரே உலகக் கோப்பையில் தொடர் ஆதிக்கம்:
ஒரே உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு முறை 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இரண்டாவது ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
ஓராண்டில் அதிக சத பார்ட்னர்ஷிப்கள்:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில், ஒரே ஆண்டில் அதிக சதங்கள் (100+ ரன்கள்) அடித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை இந்த ஜோடி சமன் செய்துள்ளது. 2025-ல் இதுவரை 5 முறை சத பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இவர்கள், 2000-ல் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் - லிசா கெய்ட்லி ஜோடி படைத்த சாதனையை சமன் செய்தனர்.


Click it and Unblock the Notifications