IND vs PAK: எல்லை மீறிய பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீனுக்கு ஐசிசி தண்டனை.. என்ன நடந்தது?
கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 2025 மகளிர் உலகக் கோப்பைப் போட்டி போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணிக்காகத் தனி ஒருவராகப் போராடி, வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடிய சித்ரா அமீன் தண்டனை பெற்றுள்ளார். அந்தப் போட்டியில் அவரது செய்கைக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) கண்டிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் (Demerit Point) வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 248 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, தொடக்க வீராங்கனை சித்ரா அமீன் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சித்ரா அமீன் மட்டும் தனி ஆளாகப் போராடினார்.

அவர் 108 பந்துகளைச் சந்தித்து 81 ரன்கள் குவித்தார். இது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியாவுக்கு எதிராக ஒரு பாகிஸ்தான் வீராங்கனை அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். ஒரு வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியபோதும், அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அவர் ஆட்டமிழந்தபோது, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பும் முழுவதுமாக முடிவுக்கு வந்தது.
தனது விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனை என்பதை உணர்ந்த சித்ரா அமீன், ஆட்டமிழந்த விரக்தியில், தனது பேட்டால் ஆடுகளத்தில் ஓங்கி அடித்தார். ஒரு சர்வதேசப் போட்டியில், ஒரு வீரர் அல்லது வீராங்கனை இதுபோல ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஐசிசி நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.
ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை
சித்ரா அமீனின் இந்தச் செயலை அடுத்து, கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர் ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ் புகார் அளித்தனர். இதை விசாரித்த போட்டி நடுவர், சித்ரா அமீன் ஐசிசி-யின் நடத்தை விதி 2.2-ஐ மீறியதாகக் கண்டறிந்தார். "ஒரு சர்வதேசப் போட்டியின்போது, கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடை, மைதான உபகரணங்கள் அல்லது மைதானத்தின் பொருட்களைச் சேதப்படுத்துவது அல்லது தவறாகப் பயன்படுத்துவது" என்பதுதான் இந்த விதியாகும்.
இந்தக் குற்றச்சாட்டை சித்ரா அமீன் ஒப்புக்கொண்டதால், அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் அபராதமாகவும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டது.
தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point) என்றால் என்ன?
ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தகுதி இழப்புப் புள்ளியும், அவர்களது ஒழுங்குமுறைப் பதிவில் 24 மாத காலத்திற்கு இருக்கும். இந்த 24 மாத காலத்திற்குள், ஒரு வீரர் 4 தகுதி இழப்புப் புள்ளிகளைப் பெற்றால், அது தடைப் புள்ளிகளாக மாற்றப்படும். இரண்டு தடைப் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும்.
சித்ரா அமீனுக்கு, கடந்த 24 மாதங்களில் இது முதல் தகுதி இழப்புப் புள்ளி என்பதால், அவர் உடனடியாக எந்தத் தடையையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த பெருமை ஒருபுறம் இருந்தாலும், பாகிஸ்தான் அணியின் தோல்வி தந்த வலி மற்றும் தனது செயலுக்காக ஐசிசியிடம் பெற்ற தண்டனை என இந்த உலகக் கோப்பை போட்டி, சித்ரா அமீனுக்கு சோதனையாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications