சென்னை: இந்திய அணி சமீபத்தில் தான் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 2024 டி20 உலகக் கோப்பை வென்றிருந்தது. அந்த வெற்றியின் தாக்கம் முடிவடையும் முன்பே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
மூன்று நாட்கள் இடைவெளியில் தென்னாப்பிரிக்க அணியை ஆடவர் கிரிக்கெட்டிலும், மகளிர் கிரிக்கெட்டிலும் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணி மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு துவக்கம் அளித்த ஷபாலி வர்மா இரட்டை சதம் கடந்து 205 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களும் குவித்தனர்.

அடுத்து ஜெமிமா ரோட்ரிகஸ் 55 ரன்கள், ஹர்மன்பிரீத் கவுர் 69 ரன்கள், ரிச்சா கோஷ் 86 ரன்களும் குவித்தனர். இதை அடுத்து இந்திய அணி 603 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 266 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஸ்னே ராணா 8 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 337 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ஃபாலோ ஆன் அளித்தது. அடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது தென்னாப்பிரிக்க அணி. அப்போது அந்த அணியின் கேப்டன் லாரா வோல்வாட் 122 ரன்களும், மூன்றாம் வரிசை வீராங்கனை சுனி லூயுஸ் 109 ரன்களும் சேர்த்தனர். நாடின் டி கிளெர்க் 61 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 373 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 37 ரன்கள் என்ற சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு துவக்கம் அளித்த ஷபாலி வர்மா மற்றும் சுபா சதீஷ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இலக்கை எட்டினர். இதை அடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
கடந்த ஏழு மாதங்களில் இந்திய மகளிர் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த 603 ரன்கள் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதுவே ஒரு இன்னிங்ஸில் மகளிர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் சினே ராணா முதல் இன்னிங்ஸில் எட்டு விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். மொத்தம் பத்து விக்கெட்கள் வீழ்த்திய அவர் இந்த ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார்.