சென்னை: இந்திய மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் நாள் ஆட்டத்தில் 20 வயதே ஆன இந்திய அணி வீராங்கனை ஷபாலி வர்மா மாபெரும் உலக சாதனை படைத்தார்.
இந்திய அணியின் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்தார். ஸ்மிருதி மந்தனா - ஷபாலி வர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்து மிரள வைத்தனர். இருவரும் இணைந்து கூட்டணியாகவும் பல்வேறு சாதனைகளை முறியடித்தனர்.

ஷபாலி வர்மா இந்தப் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும், மகளிர் டெஸ்ட்டில் அதிவேக சதம் அடித்து 40 வருட சாதனையை உடைத்து எறிந்தார். இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் சஜிதா ஷா மற்றும் கிரண் பலூச் முதல் விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. அதை ஷபாலி - ஸ்மிருதி ஜோடி முறியடித்தது. மேலும், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த கூட்டணிகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து உள்ளது இந்த ஜோடி.
இந்த போட்டியில் ஸ்மிருதி வந்தனா 123 பந்துகளில் சதம் அடித்தார். ஷபாலி வர்மா 113 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் இவர்கள் பெற்றனர். கடந்த 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜானட் 137 பந்துகளில் சதம் அடித்தது மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக சதமாக இருந்தது.
அந்த சாதனையை ஸ்மிருதி மற்றும் ஷபாலி முறியடித்துள்ளனர். இந்த பட்டியலில் 113 பந்துகள் சதம் அடித்த ஷபாலி முதல் இடத்தில் இருக்கின்றனர். ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், ஷபாலி வர்மா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார். 194 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். அதன் மூலம் அதிவேக இரட்டை சதம் அடித்த சாதனையை அவர் செய்தார்.
சமீபத்தில் இதே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அனபெல் சதர்லான்ட் 256 பந்துகளில் இரட்டை சதம் அடித்து இருந்தார். அந்த சாதனையை முறியடித்த ஷபாலி 194 பந்துகளில் இரட்டை சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய அணி முதல் நாள் ஆட்டத்திலேயே 525 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தது.
முதல் நாள் ஆட்டத்தில் 98 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 525 ரன்கள் எடுத்தது. ஷபாலி 205 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இன்னும் 6 விக்கெட்கள் இருப்பதால் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் 600 ரன்களை எட்டி மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.