ஐசிசி மகளிர் உலககோப்பை.. வெற்றியின் அருகே வந்து இந்தியா தோல்வி.. தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி
விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா முதல் தோல்வியை பெற்றுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 23 ரன்களிலும், பிரதிகா ராவல் 37 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

ஹர்லின் தியோல் 13 ரன்களில் வெளியேற கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே போன்று நடுவரிசையில் களம் இறங்கிய இளம் நட்சத்திரம் ஜெமிமா டக் அவுட் ஆக தீப்தி சர்மா நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார்.ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இருந்து தடுமாறியது.
அப்போது களத்திற்கு வந்த ரிச்சா கவுஸ் அதிரடியாக விளையாடி நான்கு சிக்ஸர், 11 பவுண்டர் என மிரட்டினார். இதன் மூலம் 77 பந்துகளில் அவர் 94 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவருக்கு சினே ரனா 33 ரன்கள் எடுத்து துணை நிற்க இந்திய மகளிர் அணி 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தொடக்க விராங்கனை தஸ்மின் டக் அவுட்டானார். சூனே லஸ் 5 ரன்களிலும் மர்ஜியாணி 20 ரன்களிலும், போஸ் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் கேப்டன் லாரா மட்டும் 70 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.
ஒரு கட்டத்தில் அவரும் ஆட்டம் இழக்க தென்னாப்பிரிக்க அணி 142 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் அருகே சென்றது. எனினும் இறுதி கட்டத்தில் நதைன் கிலர்க் அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்கா அணிக்கு உயிரூட்டினார். அவருக்கு சோலே ட்ரையான் 49 ரன்கள் எடுத்து நல்ல கம்பெனி கொடுத்தார். நதைன் மட்டும் தனி ஆளாக போராடியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஒரு கட்டத்தில் ட்ரையான் 49 ரன்களில் வெளியேற தென்னாபிரிக்க அணி 211 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நான்கு ஓவர்களில் 41 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது ஆட்டத்தின் 47வது ஓவரில் கிளர்க் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் அடித்தார். இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மீண்டும் 48வது ஓவரில் இரண்டு பவுண்டரி என 11 ரன்களும், 49 வது ஓவரில் இரண்டு சிக்ஸர் என 54 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 48.5 வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டி அசத்தியது.


Click it and Unblock the Notifications