IND vs SL: வரலாற்று சாதனை.. இலங்கையை துவம்சம் செய்த ஸ்மிருதி - ஷஃபாலி ஜோடி.. 6 வருட ரெக்கார்ட்
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக நேற்றைய (டிசம்பர் 28) தினம் அமைந்தது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பெரிய கூட்டணி அமைத்து புதிய வரலாறு படைத்தனர். இலங்கை பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, இந்திய டி20 வரலாற்றிலேயே இதுவரை நிகழ்த்தப்படாத ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடி தொடக்கத்தை அளித்தது. இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 162 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தனர்.

இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணிக்காக எந்தவொரு விக்கெட்டிற்கும் அமைக்கப்பட்ட "அதிகபட்ச பார்ட்னர்ஷிப்" இதுதான் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, டி20 போட்டியில் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதற்கு முன்பு இந்தச் சாதனை இவர்களிடமே இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக க்ரோஸ் ஐலெட்டில் நடந்த போட்டியில், இதே ஸ்மிருதி - ஷஃபாலி ஜோடி 143 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது சொந்த சாதனையைத் தாங்களே முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இந்தப் கூட்டணியில் ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார்; ஷஃபாலி வர்மா 46 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார்.
தொடக்கத்தில் பவர்-பிளேயில் 61 ரன்களைக் குவித்த இவர்கள், அதன்பிறகும் அதிரடியைக் குறைக்கவில்லை. இவர்கள் அமைத்துக் கொடுத்த இந்த அடித்தளத்தால், கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து புகுந்து விளையாட, இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் என்ற இமால ஸ்கோரை எட்டியது.
மந்தனா - ஷஃபாலி இரட்டைச் சாதனை:
கூட்டணி சாதனை மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் இவர்கள் சாதித்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 10,000 ரன்களைக் கடந்த 4-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஷஃபாலி வர்மா இந்தத் தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக அரைசதம் அடித்து, ஹாட்ரிக் அரைசதம் அடித்த 3-வது இந்திய வீராங்கனை ஆனார்.
போட்டிக்குப் பிறகு பேசிய மந்தனா, "ஷஃபாலியுடன் பேட்டிங் செய்வது எப்போதும் எளிதானது. நாங்கள் பந்தை மட்டும் கவனித்து ஆடுகிறோம். ஷஃபாலி இப்போது மிகவும் முதிர்ச்சியுடன் விளையாடுகிறார். எந்த பந்துவீச்சாளரை எங்கே அடிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளார்" என்று பாராட்டியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications