மும்பை: இந்திய அணியின் நட்சத்திரத் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது.
ஏற்கெனவே கிளாஸ் மற்றும் மாஸ் கலந்த பேட்டிங்கிற்குப் பெயர்போன மந்தனா, இந்தப் போட்டிக்கு முன் 153 இன்னிங்ஸ்களில் 3,982 ரன்கள் சேர்த்திருந்தார். 4,000 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட அவருக்கு 18 ரன்கள்தான் தேவைப்பட்டது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 121 ரன்கள் எடுத்தது. அடுத்து இலங்கை நிர்ணயித்த 122 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியா துரத்தியது. அப்போது ஆட்டத்தின் 6-வது ஓவரில், மிட்-விக்கெட் திசையில் லாவகமாக ஒரு பந்தை தட்டிவிட்டு 'சிங்கிள்' ஓடினார் மந்தனா. அந்த ஒரு ரன்... அரங்கம் அதிர இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தை அவர் எழுதினார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் சுஸி பேட்ஸ் 4,748 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இப்போது 4,007 ரன்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மந்தனாவின் வேகம். வெறும் 3,675 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இந்த 4,000 ரன்களை அவர் எட்டியிருக்கிறார். இதன் மூலம், பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய உலக வீராங்கனை என்ற பெருமையைத் தட்டிச் சென்றார்.
சுஸி பேட்ஸ் (நியூசிலாந்து) - 4,748 ரன்கள்
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 4,007 ரன்கள்
ஹர்மன்பிரீத் கவூர் (இந்தியா) - 3,654 ரன்கள்
சமாரி அத்தபத்து (இலங்கை) - 3,473 ரன்கள்
சோஃபி டிவைன் (நியூசிலாந்து) - 3,437 ரன்கள்
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் 3,654 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரையும் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டார் மந்தனா. இப்போது அவர் இருக்கும் அதிரடி ஃபார்மைப் பார்த்தால், விரைவில் சுஸி பேட்ஸையும் பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இளம் வீராங்கனைகளுக்கு ஒரு ரோல் மாடலாகத் திகழும் ஸ்மிருதி மந்தனா, தனது பேட்டிங் மூலம் இந்தியக் கொடியை உலக அரங்கில் மீண்டும் உயரப் பறக்கவிட்டுள்ளார்.