மிர்பூர் : வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா, 13 ரன்களிலும், செஃபாலி வர்மா 19 ரன்களிலும் ஆட்டமிழக்க ஜெமிமா ரோட்ரிகியூஸ் 8 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரித் டக் அவுட்டாகியும் வெளியேறினர். ஹர்லின் தியோல் 21 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
நடுவரிசையில் யாஷ்திகா பாட்டியா 11 ரன்களும், அமன்ஜோத் கவுர் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி 95 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, வங்கதேச மகளிர் அணி பேட்டிங் செய்தது. அப்போது, இந்திய வீராங்கனைகள், இந்த இலக்கை வைத்து கொண்டு வெற்றிக்காக போராடினர்.
வங்கதேச வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ரன்களும் எடுக்க போராடும் வகையில் இந்திய வீராங்கனைகள் நேர்த்தியாக செயல்பட்டனர். இதற்கு கை மேல் பலனாக இந்தியாவுக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. ஷமிமா சுல்தானா 5 ரன்களிலும், ராணி 5 ரன்களிலும் முர்சிதா 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால், இந்திய வீராங்கனைகளுக்கு வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை கிடைத்தது. எனினும் வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானா மட்டும் தனி ஆளாக நின்று இந்திய விராங்கனைகளுக்கு பதிலடி கொடுத்தார். எனினும் அவர் 38 ரன்களில் வெளியேற, வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு குறைவாக தான் இருந்தது.
எனினும் இந்திய வீராங்கனைகள் ஒரு ரன் அவுட் செய்ததோடு, பந்துவீச்சிலும் கலக்கினர். இதன் காரணமாக 7 பந்தில் 5 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட, முடிவில் வங்கதேச அணி 87 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. செபாலி வர்மா கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகி விருதை வென்றார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி தொடரை 2க்கு0 என்ற கணக்கில் வென்றது.