ஆகஸ்ட் 15.. லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி செய்த சம்பவம்.. இந்திய அணியின் தரமான வெற்றிகள்!
மும்பை: நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் முக்கியமான அங்கமாக கிரிக்கெட் மாறியுள்ளது. அந்த வகையில் சுதந்திரத் தினத்தன்று கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடியுள்ள முக்கியப் போட்டிகளை பார்க்கலாம்.
சுதந்திரத் தினத்தன்று இந்திய அணி அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறது. அதில் 1986ஆம் ஆண்டு லண்டனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களை குவிக்க, பின்னர் ஆடிய இந்திய அணி 222 ரன்களை மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்ற இந்திய அணி 312 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இருப்பினும் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்பின் 1952ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 326 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினாலும், மழைக் காரணமாக ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இதன்பின் 2001ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 187 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி ஜெயசூர்யா மற்றும் சங்கக்காராவின் சதம் காரணமாக 362 ரன்கள் குவித்தது. பின்னர் 2வது இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி 6 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதில் முரளிதரன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 148 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 486 ரன்கள் சேர்த்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 183 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 375 ரன்களை குவித்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் சண்டிமாலின் அபார சதத்தால் இலங்கை அணி 367 ரன்களை சேர்த்தது. பின்னர் வந்த இந்திய அணி வெறும் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 63 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஹெராத் சூழலில் இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர்.
இறுதியாக 2021ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் லண்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆட்டத்தால் 364 ரன்களை குவித்தது. மறுபக்கம் ஜோ ரூட்டின் அபார சதம் காரணமாக இங்கிலாந்து அணி 391 ரன்களை சேர்த்தது. பின்னர் வந்த இந்திய அணியை ஆண்டர்சன் வம்புக்கு இழுக்க, முகமது ஷமி ருத்ரதாண்டவம் ஆடினார்.
இதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களாக உயர்ந்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 120 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சுதந்திர தினத்தன்று இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்தப் போட்டியில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications