நார்தாம்ப்டன்: இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் அதிரடியாக ஆடினார். 92 பந்துகளில் அவர் 80 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியிலும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அரை சதம் அடித்திருந்தார்.
இதை அடுத்து, இரண்டு போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் அரை சதம் அடித்திருக்கிறார். அதே சமயம், முதலில் சரியாகப் பங்களிக்கவில்லை. இந்த நிலையில், இது இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் 7 வீரர்கள் விளையாடுகிறார்கள். அவர்களில் அபிமன்யு ஈஸ்வரனும் ஒருவர்.

தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், அவர்களது இடத்தை நிரப்ப சரியான வீரர்களைத் தேடி வருகிறது இந்திய அணி நிர்வாகம். அதற்கு இந்தப் பயிற்சிப் போட்டிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் ஒரு துவக்க வீரராக விளையாடப் போவது உறுதியாக இருக்கிறது. மற்றொரு துவக்க வீரராக சுப்மன் கில் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல். ராகுல் ஆகிய மூவரில் ஒருவரை விளையாட வைக்க வேண்டும். தற்போது கே.எல். ராகுல் இந்தியா 'ஏ' அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக விளையாடி 51 ரன்கள் எடுத்திருக்கிறார். எனவே, துவக்க வீரராக அனுபவம் வாய்ந்த கே.எல். ராகுல் சிறப்பாக ரன் குவித்து இருக்கிறார்.
மறுபுறம், மற்றொரு துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரன் மூன்றாம் வரிசையில் இறங்கி இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். தற்போது கேப்டன் சுப்மன் கில்லும் அணிக்குத் திரும்புவார். இந்த நிலையில், இவர்கள் மூவரில் யாரைத் துவக்க வீரராக விளையாட வைப்பது, யாரை மூன்றாம் வரிசையில் ஆட வைப்பது, நான்காம் வரிசையில் யார் இறங்குவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மூன்றாம் வரிசை மற்றும் நான்காம் வரிசைக்கான போட்டியும் சூடுபிடித்துள்ளது. அந்த இடத்துக்கு கருண் நாயர், துருவ் ஜுரல் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர். முதல் போட்டியில் கருண் நாயர் இரட்டை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இரண்டாவது போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு டெஸ்ட் போட்டியின் போது வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடினால், மூன்றாம் வரிசையில் அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கருண் நாயரை ஆட வைக்கலாம். சுப்மன் கில் நான்காம் வரிசையில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். அவர் இதுவரை துவக்க வீரராகவும் மூன்றாவது வரிசையிலும் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.
எனவே, பேட்டிங் வரிசையை சரியாக வரிசைப்படுத்தி வீரர்களைத் தேர்வு செய்வது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு சவாலான விஷயமாக அமையும். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து இருக்கிறது. 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.