அண்ணனுக்கே ஆப்பு வைத்த தம்பி.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்.. ஒரே செஞ்சுரியால் மாறிய காட்சி
பெங்களூரு: 19 வயது இளம் வீரர் முஷீர் கான் துலீப் ட்ராபி தொடரில் மற்ற இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் எல்லாம் சொதப்பிய நிலையில் சதம் அடித்து தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். முஷீர் கான் அவரது அண்ணன் சர்ஃபராஸ் கான் இடத்துக்கே வேட்டு வைக்கப் போவதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட கால காத்திருப்புக்கு பின் இடம் பெற்ற சர்ஃபராஸ் கான் தற்போது அவரது தம்பியால் சிக்கலில் இருக்கிறார். அவரது தம்பியே அவரது இடத்தைப் பறிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான் அறிமுகமாகி இருந்தார். அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் குவித்த நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

நீண்ட காத்திருப்பிற்குப் பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் அடித்து இருந்தார். அப்படி இருந்தும் அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், பல வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதில் சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கானும் இருக்கிறார்.
அவர் தற்போது நடைபெற்று வரும் துலீப் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா பி அணியில் இடம் பெற்று இருந்தார். அதே அணியில்தான் சர்ஃபராஸ் கானும் இடம்பெற்று இருந்தார். இந்த போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. சர்ஃபராஸ் கான் 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் 7 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த அணியை தனி ஆளாக காப்பாற்றினார் முஷீர் கான். அவர் 373 பந்துகளை சந்தித்து 181 ரன்கள் குவித்தார். எட்டாவது விக்கெட்டுக்கு நவுதீப் சைனியுடன் ஜோடி சேர்ந்து அவர் அபாரமாக ரன் குவித்து இருந்தார். சைனி அவருக்கு ஒத்துழைப்பு அளித்து அபாரமாக ஆடினார். அவர் 56 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்தியா பி அணி 321 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்து இருந்தது.
முஷீர் கான் கடந்த ரஞ்சி ட்ராபி தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். 19 வயதே ஆன அவர் 2024 ரஞ்சி ட்ராபி கால் இறுதிப் போட்டியில் 203 ரன்களும், அரை இறுதிப் போட்டியில் 55 ரன்களும், இறுதிப் போட்டியில் 136 ரன்களும் குவித்து இருந்தார். அதை தொடர்ந்து தற்போது துலீப் ட்ராபியில் 181 ரன்கள் எடுத்து இருக்கிறார். 19 வயதான அவருக்கு விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முஷீர் கான் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்படுவார் என்பதால் அவர் இந்திய அணியில் பல வீரர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் முதல் இடத்தில் இருப்பது அவரது அண்ணன் சர்பராஸ் கான் தான். சர்ஃபராஸ் கான் இதற்கு முன் புச்சி பாபு நான்கு நாள் டெஸ்ட் தொடரில் ஆடினார். அதில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தும், டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தார். இப்போது துலீப் ட்ராபியிலும் ஏமாற்றம் அளித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications