IND vs AFG: சாய் சுதர்சன், கேஎல் ராகுல் அபார அரைசதம்.. இந்திய அணி ரன் குவிப்பு
சந்திகார்: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. காலையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிக நேர்த்தியாகப் பந்துவீச, இந்திய பேட்டர்கள் சூழலைப் பொறுமையாகக் கையாண்டனர். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.
முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த கேப்டன் சுப்மன் கில், வியக்கத்தக்க வகையில் 6 இடது கை பேட்டர்களைக் கொண்ட வலுவான அணியுடன் களமிறங்கினார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இத்தகைய கலவையைப் பயன்படுத்திய இந்தியா, தற்போது மீண்டும் அதே வியூகத்தைக் கையாண்டுள்ளது. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக உதவி அளிக்காததால், இந்திய பேட்டர்கள் ஒவ்வொரு ரன்னுக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இணைந்து உறுதியான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே பவுண்டரியுடன் அதிரடியாகத் தொடங்கினாலும், அதைத் தொடர முடியவில்லை. ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி, 12-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய்ஸ்வாலை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். அவர் 32 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன், ராகுலுடன் கரம் கோர்த்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை முறியடித்தார். இவர்கள் இருவரும் பொறுப்புடன் விளையாடி 55 ரன்களுக்கான அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இடைவேளையின் போது ராகுல் 37 ரன்களுடனும், சாய் சுதர்சன் 32 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு ஜெய்ஸ்வாலின் விக்கெட் மட்டுமே முதல் செஷனில் கிடைத்த ஒரே வெற்றியாக அமைந்தது.
மதிய நேர உணவு இடைவேளைக்கு பிறகும், ராகுல், சாய் சுதர்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 86 பந்துகளுடன் ராகுல் அரைசதம் எட்டினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 67 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். 39 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்: இந்தியா: கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. ஆப்கானிஸ்தான்: செதிக்குல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அப்சர் ஸஸாய், அஸ்மதுல்லா உமர்சாய், ஷரஃபுதீன் அஷ்ரப், நங்கேயாலியா கரோடே, ஜியாவுர் ரஹ்மான் ஷரிஃபி, முகமது சலீம் சஃபி.


Click it and Unblock the Notifications

