Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

191 ரன்களுக்கு ஆல் அவுட்.. கிளைமேக்சில் மானம் காத்த ஷர்துல் தாகூர் - புதிய சாதனை!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஷர்துள் தாகூர் இறுதிக் கட்டத்தில் பந்துகளை பறக்கவிட்டு அரைசதம் அடிக்க, இந்தியா 191 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்ய, பனிமூட்டம் மிகுந்த வானிலையில் இந்திய அணி களமிறங்கியது.

 விழிபிதுங்கிய புஜாரா

விழிபிதுங்கிய புஜாரா

நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் உமேஷ் யாதவ்வும், முகமது ஷமிக்கு பதில் ஷர்துல் தாக்கூரும் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்து வரிசையாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சொதப்பிய ராகுல், இந்த போட்டியிலும் அதே மோடில் விளையாடினார். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புஜாராவின் டெஸ்ட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார்.

 விரைவில் அவுட்

விரைவில் அவுட்

இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ரஹானேவும் ஏற்கனவே அவுட்டாகி இருக்க வேண்டியது. க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் இருந்த போது, ஒரு அபார பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால், ரஹானே சந்தேகத்துடன் ரிவ்யூ செல்ல, ஸ்டெம்புகளுக்கு மேலே பைல்ஸை உரசிக் கொண்டு செல்வது போல் இருந்தது. இதனால், அவுட் கண்டத்தில் இருந்து ரஹானே தப்பித்தார். அதேபோல், விராட் கோலி 22 ரன்கள் எடுத்திருந்த போது, க்றிஸ் வோக்ஸ் பந்தில் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்றிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தவறவிட்டார். இத்தனைக்கு அது ஒரு சாதாரண கேட்ச் தான். ரூட் அதனை தவறவிட்டதன் பயன், கோலியால் அரைசதம் அடிக்க முடிந்தது.

 63 ரன்கள் பார்ட்னர்ஷிப்

63 ரன்கள் பார்ட்னர்ஷிப்

பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிர்கதியாய் நின்றது. எப்படியும் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிடுமே என்று எதிர்பார்த்த நிலையில், புது இரத்தம் பாய்ச்சும் விதமாக அமைந்தது ஷர்துல் தாகூரின் ஆட்டம். 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இல்லையெனில், இந்திய அணி வெறும் 130 ரன்களில் சுருண்டிருக்கும். இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்

 அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம்

31 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், ஒரு புதிய சாதனையையும் ஷர்துல் படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் போட்டிகளில், அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை ஷர்துல் பெற்றுள்ளார். ஆம்! முதல் இடத்தில், இந்திய அணியின் லெஜண்ட் ஆல் ரவுண்டர் கபில் தேவ் இருக்கிறார். இவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்ததே, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. எனினும், ஷர்துல் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 32 பந்துகளில் அரைசதம் அடித்து ஷேவாக் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து தற்போது களமிறங்கியுள்ளது.

 ஜோ ரூட் போல்ட்

ஜோ ரூட் போல்ட்

இதில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். பர்ன்ஸ் 5 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, ஹஸீப் எட்ஜ் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு, 3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், டேவிட் மலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன் பிறகு, நைட் வாட்ச்மேனாக கிரெய்க் ஒவர்டன் களமிறங்க, இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Thursday, September 2, 2021, 23:29 [IST]
Other articles published on Sep 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+