
பேக் டூ பேக் விக்கெட்ஸ்
முன்னதாக நேற்று நடந்த 2ம் நாள் ஆட்டத்தில், முதல் விக்கெட்டாக வெளியேறியவர் ரோஹித் ஷர்மா. ஓலே ராபின்சன் வீசிய புல் ஷாட்டில் தூக்கி அடித்த ரோஹித், 36 ரன்களில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் மூன்று ரன்கள் எடுத்திருந்தால் இந்த பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்திருக்கலாம். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் நிலைமை மோசமாகிவிட்டது. ஒன் டவுன் இறங்கிய புஜாரா 4 ரன்களிலும், கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இவர்களை இருவரையும் பேக் டூ பேக் பெவிலியன் அனுப்பியது ஆண்டர்சன் தான்.

கொட்டிய மழை
இதற்கு பிறகு ராபின்சன் ஓவரில், லோகேஷ் ராகுல் பந்தை ஸ்ட்ரைக்கில் நின்று சந்தித்து, லைட்டாக கவர் பாயிண்ட்டில் தட்டிவிட்டு ரன் ஓட ஒரேயொரு அடி எடுத்து வைத்தார். அதற்குள் ரன்னர் எண்டில் இருந்து பறந்த ரஹானே நான்கைந்து ஸ்டெப்புகள் முன்னே சென்றுவிட்டார். ராகுல் உடனே வேண்டாம் என்று கதற, ரஹானே மீண்டும் கிரீஸ் திரும்புவதற்குள், பேர்ஸ்டோ பந்தை துல்லியமாக ஸ்டெம்ப்பை நோக்கி வீச "Direct Hit". ரஹானே காலி. இந்தியா 4வது விக்கெட்டை இழந்தது. இந்நிலையில், 46வது ஓவர் வீசப்பட்ட போது, ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால், ஆட்டம் மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனினும், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து மழை நின்று, மீண்டும் ஆட்டம் துவங்கப்பட்டு 2 பந்துகளே வீசப்பட்ட நிலையில், மீண்டும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை விடாமல் பெய்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 46.4வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜடேஜா அரைசதம்
இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. மீண்டும் மழை குறிக்கிட்டாலும் சில நிமிடங்களில் மேகங்கள் கலைந்து கிரிக்கெட்டுக்கான நல்ல வானிலை நிலவியது. ரிஷப் சிக்ஸ், பவுண்டரி என தனது கியரை மாற்றிய நேரம், 25 ரன்களில் ராபின்சன் பந்தில் கேட்ச் ஆனார். அவர் 20 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், இரண்டு கேட்ச் வாய்ப்புகளில் இருந்து தப்பித்து 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் ஜடேஜா அற்புதமாக விளையாடினார். அவர் 86 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவின் இந்த அரைசதம் வந்திருக்கவில்லை எனில், இந்திய அணியும் இங்கிலாந்தை போல 180 - 190 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்கும்.

லாஸ்ட் விக்கெட் பார்ட்னர்ஷிப்
இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் சர்ப்ரைஸாக, கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் - பும்ரா கூட்டணி 33 ரன்கள் எடுத்தது. பும்ரா 28 ரன்களும், சிராஜ் 7 ரன்களும் எடுத்தனர். இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லீட் கிடைத்தது. முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 95 ரன்கள் லீட் கிடைத்துள்ளது. அதாவது, இங்கிலாந்தை விட 95 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்திய பவுலர்கள் இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில், இந்தியா ஏதாவது மேஜிக் செய்து வெற்றிப் பெற முயற்சிக்கலாம்.


Click it and Unblock the Notifications