
290 ரன்களுக்கு ஆல் அவுட்
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் 36 பந்துகளில் 57 ரன்கள் விளாச, இந்தியா 191 ரன்களை சேர்த்தது. இதன் இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த அணி 62 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் பிறகு, ஆறாவது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோ - ஓலே போப் ஜோடி சிறப்பாக விளையாடியது. 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்களை சேர்த்தது. பிறகு மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிய ஓலே போப், 81 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் ஓவரில் போல்டானார். மொயீன் அலி தன் பங்குக்கு 35 ரன்கள் எடுக்க, இறுதிக் கட்டத்தில் க்றிஸ் வோக்ஸ் 60 பந்துகளில் 50 ரன்கள் விளாசி, கடைசி விக்கெட்டாக ரன் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

11,000 ரன்கள்
இக்கட்டான நிலையில் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தாலும், இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பாக தொடக்கத்தை கட்டமைத்தனர். எனினும், லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி 46 ரன்களில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய புஜாரா, ரோஹித் ஷர்மாவுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க, ரோஹித் ஷர்மா நிதானமாக ரன்களை சேகரித்தார். அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்த ரோஹித், புஜாராவின் சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக, 205 பந்துகளில் வரலாற்று சிறப்புமிக்க சதத்தை நிறைவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் எட்டாவது சதமாகும். ஒரு தொடக்க வீரராக நான்காவது டெஸ்ட் சதமாகும். இந்த இன்னிங்ஸின் மூலம், அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 11,000 ரன்களை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை நிறைவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் ஒரு தொடக்க வீரராக சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் அவர் பெற்றார்.

கோலி எட்ஜ்
பிறகு ரோஹித் 127 ரன்களிலும், புஜாரா 61 ரன்களிலும் அடுத்தடுத்து ராபின்சன் ஓவரில் அவுட்டானார்கள். நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ரவீந்திர ஜடேஜா க்றிஸ் வோக்ஸ் ஓவரில் 17 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு களமிறங்கிய துணை கேப்டன் ரஹானே 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரும் க்றிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பிறகு கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட். சிறப்பாக ஆடி வந்த கோலி 44 ரன்களில் மொயீன் அலி ஓவரில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

8வது விக்கெட் சாதனை
பிறகு பண்ட் - ஷர்துல் தாகூர் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தது. உண்மையில் இங்கிலாந்து பவுலர்களை ஓடவிட்டார் ஷர்துல். இங்கிலாந்தின் அனைத்து ஃபாஸ்ட் பவுலர்களின் பந்துகளையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டார். குறிப்பாக, ஸ்ட்ரெய்ட்டில் அவர் அடிக்கும் பவுண்டரிகளுக்கு இங்கிலாந்து ரசிகர்களே விசிலடித்தனர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்த ஷர்துல், இந்த இரண்டாம் இன்னிங்ஸிலும் 60 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கி ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த 6வது வீரர் எனும் சாதனையை ஷர்துல் படைத்துள்ளார். இதற்கு முன், ஹர்பஜன் சிங் மற்றும் ரிதிமான் சாஹா ஆகியோர் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்துள்ளனர். உலகளவில் 6வது வீரர் என்ற பெருமையையும், இந்திய அளவில் 3வது வீரர் எனும் பெருமையையும் ஷர்துல் பெற்றிருக்கிறார். பிறகு, ஜோ ரூட் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஷர்துல் வெளியேறினார்.

ரோஹித், புஜாரா மிஸ்ஸிங்
அவரைத் தொடர்ந்து, இந்த டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், மொயீன் அலி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். சரி.. இந்தியாவின் கதையை இத்தோடாவது முடித்துவிடலாம் என்று எண்ணிய இங்கிலாந்தின் கணக்குக்கு மீண்டும் ஒரு கமா (,) போட்டது பும்ரா - உமேஷ் பார்ட்னர்ஷிப். பும்ரா 24 ரன்களும், உமேஷ் 25 ரன்களும் எடுத்து, மேற்கொண்டு இந்தியாவுக்கு 50 ரன்கள் திரட்டிக் கொடுத்தனர். பிறகு, ஒருவழியாக இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில், ரோஹித்தின் இடது முழங்காலில் அசௌகரியம் இருப்பதாலும், புஜாராவின் இடது கணுக்காலில் வலி உள்ளதாலும் இருவரும் ஃபீல்டிங் செய்ய மாட்டார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது


Click it and Unblock the Notifications











