மான்செஸ்டர்: அரையிறுதியில் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம் என்று ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. கடைசி 2 லீக் போட்டிகள் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இலங்கையை வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் தோற்க 14 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் பின் தங்கியது. எனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும் 4ம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

போட்டிக்கு முன்பாகவே இந்தியா பைனலில் நுழைந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி என்று சொல்லும் போது, இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து விட்டது என்று சொல்லலாம்.
கிரிக்கெட்டில் இப்படி கணிப்புகளை சொல்ல முடியாது. நான் இந்திய வீரராகவோ அல்லது கோலியாகவோ இருந்தால் இவ்வாறு சொல்ல மாட்டேன். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் ஒருவனாக சொல்கிறேன், இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.
என்னை பொறுத்தவரை இந்திய அணி இறுதி போட்டியில் ஏற்கனவே ஒரு காலை வைத்து விட்டது. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள நியூசிலாந்து, நம்பிக்கையை சற்று இழந்து தளர்ந்து போயிருக்கும் என்று கூறலாம். அதுதான் நியூசிலாந்துக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியை கடினமானதாக மாற்றும் என்றார்.