இந்தூர் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்ற நினைத்த ஆஸ்திரேலியா வீரர்களை மூன்றாம் நடுவர் கையும் களவுமாக பிடித்தார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மைதானத்தின் பவுண்டரி அளவு வெறும் 55 மீட்டர் தான் என்பதால் பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்கள். ருதுராஜ் ஆட்டம் இழக்க கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடியது.
இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்களை சேர்த்தது. சுப்மன் கில் 92 பந்துகளில் சதம் அடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் சதம் அடித்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் காலில் லேசாக தசை பிடிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் பந்தை அடிக்கும் போது அதனை பவுலரே கேட்ச் பிடித்து விட்டார்.
இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்க களநடுவர் மூன்றாம் நடுவர் உதவியை நாடினார். ஆனால் பிறகு தான் தெரிந்தது ஆஸ்திரேலிய வீரர் ஷான் அப்பாட் பந்தை பிடித்து விட்டு அதனை தரையில் வைத்தது ரிப்ளேவில் உறுதியானது. இதனையடுத்து இதனை மூன்றாம் நடுவர் நாட் அவுட் என அறிவித்தார். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரன் கிரீன் கில் அடித்த பந்தை கேட்ச் பிடித்து விட்டு பின் தரையில் வைத்தார்.
ஆனால் மூன்றாம் நடுவர் அதற்கு அவுட் வழங்கினார். ஆனால் இம்முறை இது நாட் அவுட் என மூன்றாம் நடுவர் சரியாக அறிவித்தார். இதனை அடுத்து பெவிலியனுக்கு சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் வந்து ஒரு பவுண்டரி அடித்தார். எனினும் அதற்கு அடுத்த பந்தில் அவர் சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் ஆனார். மேலும் அவர் தொடர்ந்து விளையாடி இருந்தால் இன்னும் அதிக ரன்கள் அடித்திருப்பார். ஆஸ்திரேலிய பில்டிங்கில் ஏமாற்றுவது இது முதன்முறையல்ல, ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க் இதே போன்று கேட்ச் பிடித்து தரையில் பந்தை வைத்தார். அப்போது நடுவர் அதற்கு அவுட் வழங்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் மூன்றாம் நடுவரிடம் சரியாக சிக்கியதை இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.