கொச்சியில் நாளை 2வது ஒரு நாள் போட்டி; மழையால் ஆட்டம் பாதிக்கப்படலாம்?
கொச்சி:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நாளைய 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் மழையால் பாதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 7 ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொள்கிறது. முதல் போட்டி பெங்களூரில் நடந்தது. ஆஸ்திரேலியா அணி தனது இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்திய அணி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் (டெண்டுல்கரை இழந்து) மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாமல் நடுவர்கள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், 2வது போட்டி நாளை கொச்சியில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் கொச்சிக்கு வந்துள்ளன. கொச்சியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
மைதானத்தின் வெளிப்பகுதியில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் போட்டியை நடத்துவதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் கொச்சி ரசிகர்கள் தங்களது ஸ்டார் வீரர் ஸ்ரீசாந்த்தின் ஆட்டத்தைக் காண முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.
இதற்கிடையே, கங்குலிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் நாளைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் கவலைப்படும்படியாக ஒன்றும் இல்லை. அதேசமயம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் நாளைய போட்டிக்கு மட்டும் அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. கங்குலிக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம்பெறுவார்.
பெங்களூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா ரன்களை வாரி குவித்து விட்டது. இதனால் பந்து வீச்சில் மாற்றம் கொண்டுவரலாம். ரமேஷ் பவார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்பஜன்சிங் சேர்க்கப்படுகிறார்.
நாளைய ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்ஷன், நியோ ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications