ராஜ்காட் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்காட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று உள்ளது.
எனினும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு விளையாடப்படும் கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டி என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் நாளைய போட்டிக்கு திரும்பி இருக்கிறார்கள். இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். மூன்றாவது மட்டும் கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரர்கள் சுப்மன் கில், ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா அணிக்கு திரும்புவதால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார்.
அவருக்கு ஜோடியாக இசான் கிஷன் விளையாட வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்குவார்கள். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் ஆறாவது இடத்தில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார்கள்.கீழ் வரிசையில் ஏழாம் இடத்தில் ஜடேஜாவும் எட்டாம் இடத்தில் தமிழக வீரர் அஸ்வினும் களமிறங்குவார்கள்..
ஒன்பதாவது இடத்தில் முகமது சிராஜும் பத்தாவது இடத்தில் பும்ராவும் 11-வது இடத்தில் குல்தீப் யாதவும் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ராஜ்காட் மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எடுபடும். முக்கியமாக இந்த ஆடுகளத்தில் லெக் ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். இதன் காரணமாக இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்குகிறது.