ராய்ப்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த ராய்ப்பூர் மைதானத்தில் தற்காலிக மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான செலவு மட்டும் ரூ.1.4 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டிக்கு முன் ராய்ப்பூர் மைதானத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து ராய்ப்பூர் மைதானத்திற்கான மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பே ராய்ப்பூர் மைதானத்தின் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக மின்சார கட்டணம் மட்டும் ரூ.3.16 கோடி மீதம் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடப்பதால், தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் கேலரிகள் மற்றும் வேறு சில இடங்களுக்கு மட்டுமே தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெனரேட்டரை பயன்படுத்தி மட்டுமே மின் விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ மீது பலரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் ராய்ப்பூர் மைதானத்திற்கு தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டதன் செலவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெனரேட்டை மற்றும் பேக் அப் மின்சாரத்திற்காக மட்டும் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதான் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு செய்திருந்தால், மின்சார கட்டணத்தை கட்டியிருக்க முடியும்.
ஆனால் ராய்ப்பூர் மைதான நிர்வாகிகள் தற்காலிக மின்சாரத்திற்காக கூடுதல் செலவு செய்யும் முடிவை எடுத்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்ற மைதான ஊழியர்கள் தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் காட்டமாக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.