முதல் டெஸ்ட்-1 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா

முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாட முடியாமல் போனதற்கு வட்டியும், முதலுமாக 2வது இன்னிங்ஸில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்து விட்டார் லட்சுமண்.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 428 ரன்களை எடுத்தது. இந்தியா 405 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸில் 192 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியப் பந்து வீச்சு அமைந்தது ஹில்பென்ஹாஸும், போலிஞ்சரும் இணைந்து சரமாரியாகவிக்கெட்களை வீழ்த்தியதால் இந்தியா நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.
55 ரன்களை எடுப்பதற்குள் நேற்று இந்தியா 4 விக்கெட்களை இழந்து விட்டது. டெண்டுல்கர் கையில் வெற்றி பெறும் பொறுப்பு வந்தது.
இன்று காலை ஆட்டம் தொடங்கியது. நேற்று 10 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த டெண்டுல்கர் மேலும் 28 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வி.வி.எஸ்.லட்சுமண் தலையில் பொறுப்பு விழுந்தது. அவர் முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை. இதனால் இந்த இன்னிங்ஸிலாவது சிறப்பாக ஆடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் படு ஸ்டைலாக ஆடிய லட்சுமண் அணியை தோல்வியின் விளிம்பிலிருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு இட்டு வந்து விட்டார்.
ஒருபக்கம் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்து வந்த நிலையில் அவர் ரன்களை மெதுவாக சேர்க்க ஆரம்பித்தார். அவருக்கு நல்ல துணையாக வந்து சேர்ந்தார் இஷாந்த் சர்மா.
சிறப்பாக ஆடிய சர்மா 31 ரன்கள் வரை தாக்குப் பிடித்து லட்சுமணுக்கு உதவியாக நின்றார். இஷாந்த் சர்மாவின் அபார ஒத்துழைப்பு காரணமாகவே லட்சுமணால் சிறப்பாக ஆட முடிந்தது, இந்தியாவும் தோல்வியிலிருந்து தப்பியது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய லட்சுமண் 73 ரன்களைக் குவித்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 79 மட்டுமே. இறுதியில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து மயிரிழையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
ஆட்ட நாயகனாக ஜாகிர்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications