20-20: இறுதிப் போட்டியில் இந்தியா; பாகிஸ்தானுடன் நாளை மோதல்!
டர்பன்:
தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்ற 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு காயத்திலிருந்து குணமடைந்து விட்ட அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சேர்க்கப்பட்டார்.
முதலில் களமிறங்கிய ஷேவாக், கவுதம் காம்பிர் ஜோடி 30 ரன்களே குவித்தது. ஷேவாக் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய உத்தப்பா காம்பிருடன் ஜோடி சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, 24 ரன்கள் எடுத்து காம்பிர் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சிக்ஸருக்கு சொந்தக்காரரான யுவராஜ்சிங், தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தனது கணக்கை துவக்கினார். யுவராஜ்சிங் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை நையப் புடைத்தார். இவருடைய ஆட்டத்தை பார்த்து உத்தப்பாவும் தன் பங்குக்கு 3 சிக்ஸர்களை அடித்து ஆஸ்திரேலியாவை அதிரச் செய்தார்.
ஆட்டத்தின் 15வது ஓவரில் ராபின் உத்தப்பா 28 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து, எதிர்பாராமல் ரன்-அவுட் ஆனார். அதன் பிறகு கேப்டன் டோணி, யுவராஜூடன் ஜோடி சேர்ந்ததும், இருவரும் அபராமாக விளையாடினர்.
இந்நிலையில் 20 பந்துகளில் யுவராஜ் தனது அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து விளாசித் தள்ளிய யுவராஜ்சிங், கிளார்க்கின் ஸ்பின் பவுலிங்கில் ஹஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார்.
யுவராஜ் சிங் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.
பின்னர் டோணியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த டோணி கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இந்த ரன்களில் 128 ரன்கள் கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற 189 ரன்கள் தேவை என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேப்டன் கில்
கிறிஸ்ட் 22 ரன்கள் எடுத்தும், அவரைத் தொடர்ந்து ஹோட்ஜ் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இந்தியர்களை பயமுறுத்திக் கொண்டிருந்த அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் 64 ரன்களுக்கும், சைமண்டஸ் 43 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறியவுடன் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
அதன் பின்னர் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆட்டநாயகன் விருது யுவராஜ் சிங்கிற்கு கொடுக்கப்பட்டது. நாளை (24-09-2007) நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்த இறுதிப்போட்டியை இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இரு அணிகளும் உலக அளவிலான இறுதிப் போட்டி ஒன்றில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் வென்று கோப்பையுடன் வந்தால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.3 கோடி பரிசாக கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாடு அறிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications