மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. மொஹாலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முகமது சமி,பும்ரா ஆகியோர் துல்லியமாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர். இதனால் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் நான்கு ரன்களில் ஆட்டம் இழக்க, டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கனை சேர்த்தனர்.

இதில் டேவிட் வார்னர் 52 ரன்களிலும், ஸ்மித் 41 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லாபஸ்சேன் 39 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். கேமரான் கிரீன் 31 ரன்களில் ரன் அவுட் ஆக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்கிலீஷ் 45 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 29 ரன்களும் பேட் கம்மின்ஸ் 21 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் முகமது சமி 10 ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 51 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனை அடுத்து 272 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கில் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாற முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. ருதுராஜ் 71 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 74 ரன்கள் வெளியேறினார்.
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் மூன்று ரன்களில் ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது போன்ற நடுவரிசையில் விளையாடிய இஷான் கிஷன் 18 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்சனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது .
எனினும் கே எல் ராகுல் மற்றும் சூரியகுமார் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சூரியகுமார் யாதவும் அரை சதம் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க ராகுல் ஜடேஜா ஜோடி 48.4வது ஓவரில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. கே எல் ராகுல் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார்.உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க உள்ளது. மொஹாலியில் 27 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.