உலககோப்பை - 6க்கு 6 வெற்றி..இங்கிலாந்துக்கு ஷமி வச்ச ஆப்பு..100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா
லக்னோ : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 12 புள்ளிகளை பெற்றுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற 29 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்தியா அணி நடப்பு தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்தது.

இதில் ஒன்பது ரன்களில் கில், விராட் கோலி டக்அவுட் ஆகியும் ஸ்ரேயாஸ் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 101 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டர்களும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு கே எல் ராகுல் 39 ரன்கள் சேர்த்து நல்ல துணையாக இருந்தார். இறுதியில் சூரியகுமார் யாதவும் தன்னுடைய அபார ஆட்டத்தால் 49 ரன்கள் சேர்க்க, ஜடேஜா உள்ளிட்ட கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் மட்டும் தான் சேர்த்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி 20 ஓவரில் எட்டிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இந்திய அணி பவுலர்கள் தங்களுடைய அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்தனர்.

தொடக்க வீரர் பாரிஸ்டோ 14 ரன்களிலும், டேவிட் மாலன் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணியின் சரிவு தொடங்கியது. கேப்டன் பட்லர் 10 ரன்களில் வெளியேற மோயின் அலி 15 ரன்கள் சேர்த்தார். லிவிங் ஸ்டோன் 27 ரன்களும், கிறிஸ் வொக்ஸ் 10 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சமி ஏழு ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா அணி அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது. இதேபோன்று நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேற உள்ளது.


Click it and Unblock the Notifications