இந்தியா அபார வெற்றி- யுவராஜ் உலக சாதனை
டர்பன்:
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதத்தை அடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளார். அவர் தொடர்ந்து 6 சிக்ஸர்களையும் அடித்தார்.
தென்ஆப்பிரிக்காவில் 12 நாடுகள் பங்கு பெறும் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் முடிந்த லீக் சுற்றில் 4 நாடுகள் வெளியேறிவிட்டன. தற்போது சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் இங்கிலாந்துடன் மோதியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது இந்திய அணி.
இந்திய அணி கேப்டன் டோணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய வீரேந்திர சேவக் மற்றும் கவுதம் காம்பிர் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 136 ரன்களை குவித்தது.
சேவக் 68 ரன்களுக்கும், காம்பிர் 58 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதன்பிறகு வந்த டோணி மற்றும் யுவராஜ் சிங் அபராமாக ஆடினர்.
இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 19வது ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து கதி கலங்க வைத்தார். இவர் 12 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதத்தை எட்டியவர் என்ற பெருமையை யுவராஜ்சிங் பெற்றார்.
மேலும் 6 பந்துகளில் 6 சிக்சர்களை 20-20 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை யாரும் அடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
அதன்பிறகு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றைய போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவுடன் மோதுகிறது. இந்தப்போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டியின் துவக்கத்திலிருந்து இதுவரை தென்ஆப்பிரிக்கா எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications