புரோ இது எப்படி இருக்கு…. தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா
கிம்பர்லே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டியில் இந்தியா 2-0 என்று முன்னிலையில் இருக்க, மகளிர் அணியும் தனது முதல் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான ஆடவர் அணி முதல் 2 ஒருதினப் போட்டிகளிலும் வென்று 2-0 என முன்னிலையில் உள்ளது. நாளை மூன்றாவது போட்டி நடக்க உள்ளது.

இந்த நிலையில் நேற்று நடந்த முதல் ஒருதினப் போட்டித் தொடரில், இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இரண்டு புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளது.
முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. ஓப்பனர் ஸ்மிருதி மந்தனா 98 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அதில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளும் அடங்கும். கேப்டன் மிதாலி ராஜ் 70 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 43.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. சீனியர் பவுலரான ஜூலான் கோஸ்வாமி 24 ரன்களுக்கு 4 விக்கெட்களையும், ஷிகா பாண்டே 23 ரன்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். பூணம் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் 41 ரன்கள் எடுத்தார். மரிசாம்னே காப் 23 ரன்கள் அடித்ததுடன், 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு ஜூவாலா கோஸ்வாமி மீதி விஷயத்தை பார்த்துக் கொண்டார்.
Story first published: Tuesday, February 6, 2018, 11:25 [IST]
Other articles published on Feb 6, 2018


Click it and Unblock the Notifications