இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

இந்தியா வென்ற ஒரே உலகக் கோப்பையின் நாயகன் கபில் தேவ். அன்று அவரது தலைமையிலான இந்திய அணி எதிர்பாராதவிதமாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அன்றைய ஜாம்பவானான மேற்கு இந்தியத் தீவுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்று இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இதனால் இந்திய அணியின் செயல்பாடுகளை அமைதியான முறையில் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கபில். இருப்பினும் தனது கருத்துக்களை சரியான சமயத்தில் சொல்ல இவர் தவறுவதில்லை.
தற்போதைய உலகக் கோப்பை வேட்டையில் இறங்கியுள்ள இந்திய அணி குறித்து கபில் தேவ் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கூறி வருகிறார். இந்தியாவின் பந்து வீச்சு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இது, இங்கிலாந்துடனான போட்டியின்போதே தெரிந்து போய் விட்டது. இதை இதற்கு மேல் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அந்தப் போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றியைப் பெற்றிருக்க முடியும்.
நமது பேட்ஸ்மேன்களுடன், பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டால், பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதை உணர முடியும். அதேசமயம், பந்து வீச்சு முற்றிலும் சரியில்லை என்று கூறி விட முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா பெற்ற பல வெற்றிகளுக்கு இதே பந்து வீச்சாளர்கள்தான் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.
நான் பந்து வீச்சாளர்களை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் 338 ரன்களை எடுத்து விட்டு, அந்தப் போட்டி டையில் முடியும் வரை நாம் விட்டு விட்டோம் என்றால் பந்து வீச்சு குறித்து நிச்சயம் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் கபில்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications