39 பந்தில் 50.. சிஎஸ்கே கேப்டனுக்கு கவுண்ட்டர் அட்டாக்.. டெஸ்ட் போட்டியில் மிரள வைத்த ஸ்ரேயாஸ்
அனந்தபூர்: துலீப் ட்ராபி தொடரில் இந்தியா டி அணியின் கேப்டனாக இடம் பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக அரை சதம் அடித்து இந்தியா சி அணியை மிரள வைத்தார். வெறும் 39 பந்துகளில் அரை சதம் அடித்து வியக்க வைத்தார். முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா டி அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டி விடலாம் என கனவு கண்ட இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தனது "கவுன்ட்டர் அட்டாக்" அதிரடி ஆட்டம் மூலம் பதிலடி கொடுத்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் டிராபி டெஸ்ட் தொடரை நடத்தி வருகிறது பிசிசிஐ. வங்கதேச டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன் இரண்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். அதில் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கும் இந்தியா சி அணிக்கு எதிராக இந்தியா டி அணி முதல் போட்டியில் பங்கேற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார், முன்னதாக அவர் புச்சி பாபு டெஸ்ட் தொடரிலும் பெரிதாக ரன் எடுக்கவில்லை. அதனால், அவரை இந்திய அணியில் தேர்வு செய்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் தனது பேட்டிங் ஃபார் மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸில் அதை செய்து காட்டினார்.
இந்தியா சி அணி தனது முதல் இன்னிங்ஸில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின் இந்தியா டி அணி இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. இரண்டு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் மிகக் குறைவான ரன்கள் மட்டுமே எடுத்திருந்தன. இந்தியா டி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ரன் குவிப்பது கடினம் என்று பலரும் எண்ணினர்.
அதற்கு ஏற்ப 40 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு விக்கெட்கள் வீழ்ந்தன. அப்படி இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடத் துவங்கினார். அவர் 9 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து அரை சதம் கடந்தார். வெறும் 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பின்னர் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா டி அணி 20 ஓவர்களுக்குள் 100 ரன்களை கடந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் ரன் ரேட் 6 ஆக இருந்தது. உள்ளூர் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்ததால் ருதுராஜ் கெய்க்வாட் அணி மிரண்டு போனது. ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் வீழ்ச்சிக்கு பின் தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினார். அதனால் இந்தியா சி அணி கடும் அழுத்தத்தில் இருந்தது.


Click it and Unblock the Notifications