இந்திய அணி கோச் பதவி நேர்காணலுக்கு அழைக்காமல் சந்தீப் பாட்டிலுக்கு ஷாக் கொடுத்த 'கங்குலி கமிட்டி'
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கான நேர் காணலுக்கு, முன்னாள் பயிற்சியாளரும், தேர்வு குழு தலைவருமான சந்தீப் பாட்டிலை அழைக்ககூட இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில், கும்ப்ளே, வெங்கடேச பிரசாத் என பல்வேறு பிரபலங்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தோரிடம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி, நேற்று நேர்முக தேர்வை நடத்தியது. இந்த நேர்முக தேர்வுக்கு சந்தீப் பாட்டிலை அழைக்கவில்லை என்துதான் சர்ச்சைக்கு காரணம்.

கங்குலி கமிட்டி
சவுரவ் கங்குலி, லட்சுமணன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களை கொண்ட இந்த கமிட்டி நேற்றுதான் இறுதி சுற்று நேர்காணலை நடத்தியது. எனவே சந்தீப் பாட்டிலுக்கு இனியும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காது.

தெரியலியே
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சந்தீப் பாட்டில் கூறியதாவது: ஏன் என்னை நேர் காணலுக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. ஆனால், கிரிக்கெட் ஆலோசனை குழு மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. அவர்கள் தகுதியான நபரை பயிற்சியாளராக நியமிப்பார்கள்.

வாழ்த்துக்கள்
புதிதாக யார் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஏன் நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்பது குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.

வருத்தம் இல்லை
என்னை நேர் காணலுக்கு அழைக்காதது குறித்து நான் புகார் தெரிவிக்கவோ, புலம்பவோ போவதில்லை. நான் எதிர்பாராத அளவுக்கு பதவிகளை பிசிசிஐ எனக்கு வழங்கி கவுரவித்துள்ளது. எனவே பதவி பற்றி கவலையில்லை என்றார்.

இருக்கலாம்
சந்தீப்பாட்டில் தற்போது தேர்வுக்குழு தலைவராக இருப்பதால், அவரை பயிற்சியாளராகவும் நியமிப்பது சரியாக இருக்காது என்பது கிரிக்கெட் ஆலோசனை குழு எண்ணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கங்குலியின் கோச்
1996ம் ஆண்டு சவுரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தபோது, சந்தீப் பாட்டில்தான் இந்தியாவின் பயிற்சியாளராக பதவி வகித்தார் என்பது இதில் சுவாரசிய தகவலாகும்.


Click it and Unblock the Notifications