
உம்ரான் மாலிக்
குறிப்பாக காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் மீது தான் அனைவரின் கண்களும் உள்ளன. உம்ரான் மாலிக் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 22 விக்கெட்டுகளும், அதிவேகமாக பந்துவீசியும் அசத்தினார். இதனால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மைதானங்களில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் உம்ரான் மாலிக் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல் டிராவிட் பாராட்டு
ஆனால், அது நடக்க வாய்ப்பே இல்லை என்று ராகுல் டிராவிட்டின் பேட்டியின் மூலம் தெளிவானது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ராகுல் டிராவிட், உம்ரான் மாலிக்கை வலைப் பயிற்சியில் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. அவருடைய வேகம் நன்றாக உள்ளது. அவர் இளம் வீரர், நிறைய கற்று கொண்டு வருகிறார். உம்ரான் மாலிக் போன்ற வீரர் அணியில் இருப்பது மகிழ்ச்சியே.

வாய்ப்பு கிடைக்காது
உம்ரான் மாலிக் எவ்வளவு போட்டியில் விளையாடுகிறாரோ, அந்த அளவுக்கு கற்று கொண்டு சிறப்பாக செயல்படுவார். ஆனால், தற்போது பெரிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க இயலாது என்று டிராவிட் வெளிப்படையாக கூறிவிட்டார். அதே டிராவிட் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஏ பயிற்சியாளராக இருந்த போது என்ன சொன்னார் தெரியுமா?

பழைய டிராவிட்டின் பேச்சு
இந்திய ஏ அணியில் இருக்கும் வீரர்களுக்கு நான் சொல்லி கொள்வது என்னவென்றால், நீங்கள் என்னுடன் விளையாட வந்துவிட்டால் நிச்சயம் நான் ஒரு போட்டியிலாவது உங்களுக்கு வாய்ப்பு தருவேன். காரணம், நான் இளம் வீரராக இந்திய ஏ அணிக்கு சுற்றுப் பயணத்திற்கு வரும் போது, எனக்கு ஒரு போட்டியில் விளையாட கூட வாய்ப்பு கிடைக்காது. அது பெரும் மன கஷ்டத்தை தரும் என்று ராகுல் டிராவிட் கூறி இருந்தார். தற்போது அதே டிராவிட் வேறு விதமாக பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications