மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்த பிறகு முதல் முறையாக ரோகித் சர்மா வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுடன் பேசி இருக்கிறார். இதில் பல்வேறு கருத்துக்களை அவர் பேசி இருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
சிறுவயதில் இருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் உலகக் கோப்பையை வாங்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக திகழ்கிறது. இந்த தோல்விக்கு பிறகு நான் மிகவும் மனம் உடைந்து இருந்தேன். எனினும் என்னுடைய மகள், மனைவி, நண்பர்கள் ஆகியோர் என்னை தேற்றி வருகிறார்கள்.

இருந்தும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நாம் தோல்வி அடைந்து விட்டோமே என்ற எண்ணம் என்னை வாட்டி எடுத்தது. இதிலிருந்து மீண்டு வர நான் முயற்சி எடுத்தேன். இதற்காக குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு பொழுதை கழித்தேன். அப்போது ரசிகர்கள் என்னிடம் வந்து நிறைய அன்பு காட்டினார்கள். நாங்கள் இறுதிப் போட்டியில் தோற்று விட்டோம் என்பதை அவர்கள் பெரிதாக கவலை கொள்ளவில்லை.
மாறாக நாங்கள் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றோம் என்பதை தான் அவர்கள் பேசினார்கள். அதற்காக என்னை வாழ்த்தினார்கள். இதன் மூலம் காயப்பட்ட என்னுடைய நெஞ்சுக்கு மருந்து போல் அவர்களுடைய வார்த்தைகள் அமைந்தது. நான் பார்த்த அனைத்து ரசிகர்களுமே உலக கோப்பையில் நாங்கள் ஆடிய விதம் குறித்து பாராட்டி என்னை தேற்றினார்கள்.
அவர்கள் பாராட்டைக் கேட்கும் போது இப்படிப்பட்ட ரசிகர்களுக்காக உலக கோப்பையை வென்று தர முடியவில்லை என்ற வருத்தம் மீண்டும் வந்தது. உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் பத்து ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றாலும் பத்து போட்டிகளிலும் சிறுசிறு தவறுகள் செய்தோம். ஆனால் அது முடிவை பாதிக்காத வகையில் இருந்தது. எனினும் இறுதிப் போட்டி மட்டும் நாங்கள் எதிர்பார்க்காதது நடந்து விட்டது.
50 ஓவர் உலகக் கோப்பை எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்படியே முடங்கி விடக்கூடாது. வாழ்க்கை என்றால் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்து செல்ல வேண்டும். எது நடந்தாலும் அடுத்த இலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டும். அப்படி இருக்க வேறு ஒரு பரிசுக்காக நான் மீண்டும் போராட தயாராகி விட்டேன். உங்களுடைய அன்பு தான் எனக்கு மருந்தாக அமைந்திருக்கிறது என்று ரோகித் சர்மா உருக்கத்துடன் பேசி இருக்கிறார்.