மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது.அதன் மூலம் உலக கோப்பையை 12 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றும் வாய்ப்பு பறிபோனது.
அத்துடன் ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது பிசிசிஐ வரும் ஜூன் மாதம் வரை டிராவிட்டின் பதவி காலத்தை நீட்டி இருக்கிறது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கி இருக்கிறார்.

இந்த ஆறு மாதத்தில் டிராவிட்டுக்கு இருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு இருக்கும் மிகப்பெரிய தொடர் என்றால் அது டி20 உலக கோப்பை தான்.வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை ராகுல் டிராவிட் முதலில் கட்டமைக்க வேண்டும்.
ஏற்கனவே இரண்டு ஐசிசி தொடர்களில் விளையாடி ஒன்றில் அரையிறுதி ஒன்றில் இறுதி என சென்றுள்ள டிராவிட்டுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. இதில் டிராவிட் வெல்ல வேண்டும் என்றால் அதற்கு முதலில் அணியை பலமாக கட்டமைக்க வேண்டும். பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் தோய்வாக இருக்கும். ரன் குவிக்கவும் சேசிங் செய்யவும் கடினமாக இருக்கும்.
அதற்கு ஏற்ற வீரர்களை டிராவிட் தயார் செய்ய வேண்டும். மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எப்படி ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சு படையை டிராவிட் தயார் செய்தாரோ அதேபோல் டி20 கிரிக்கெட் போட்டிக்கும் டிராவிட் ஒரு படையை உருவாக்க வேண்டும். இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் இந்திய அணி குறைந்த அளவிலே டி20 போட்டியில் விளையாடும்.
அதற்குள் ஒரு அணியை தயார் செய்ய வேண்டும் என்பது கொஞ்சம் கடினமான காரியம் தான். டிராவிட்டுக்கு இருக்கும் இரண்டாவது சவால் டெஸ்ட் கிரிக்கெட் தான். இந்தியாவின் இந்த ஆறு மாதங்களில் 7 முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த ஏழிலும் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் இளம் வீரர்கள் டெஸ்ட் அணியில் தற்போது அதிகமாக இடம்பெற உள்ளார்கள் என்பதால் அவர்களையும் கண்காணித்து ஒரு அணியை உருவாக்க வேண்டும். இந்த சவால்களை நோக்கி தான் டிராவிட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் அமைந்திருக்கும்.