மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றார்.
தற்போது டிராவிட்டின் பதவிக்காலம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்தது. தற்போது பதவிக்காலம் முடிந்தவுடன் டிராவிட் என்ற பதவியில் நீடிப்பாரா இல்லை புதிய பயிற்சியாளர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் ராகுல் டிராவிட்டின் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டித்து பிசிசிஐ உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் டிராவிட் தன் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கியுள்ள பிசிசிஐ நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.இது குறித்து பேசிய அவர் இந்திய அணியில் நாங்கள் உருவாக்கிய கலாச்சாரம் நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்.
இந்தப் பொறுப்பில் தான் வகிக்கும் போது வீட்டை விட்டு பல நேரம் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக என்னுடைய குடும்பம் செய்துள்ள தியாகத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. உலகக்கோப்பை தொடருக்கு பிறகு புதிய சவால்கள் காத்திருக்கிறது. அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் இந்திய அணியில் பயிற்சியாளராக நீடித்து வருகின்றேன். இந்த பயணம் நல்ல நினைவுகளை தருகிறது. ஒரு அணியாக நாங்கள் பல உச்சங்களையும் சரிவுகளையும் சந்தித்து இருக்கிறோம்.
ஒவ்வொரு வீரர்களும் எனக்கு நட்புணர்வுடனும் ஆதரவு தருவது சிறப்புமிக்கது. எங்கள் அணியின் கலாச்சாரம் முறை ஒரே மாதிரி தான் இருக்கும். வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி நாங்கள் சரியான நடைமுறைகளை பின்தொடர்ந்து போட்டிகளுக்காக தயாராகி வருகிறோம்.அதுதான் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டதற்கு கம்பீர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இன்னும் ஆறு மாதத்தில் அடுத்த டி20 உலக கோப்பை வர இருப்பதால் இந்திய அணியில் தற்போது மாற்றம் செய்யக்கூடாது என்றும் கம்பீர் கூறியுள்ளார்.