சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற முடிந்த நிலையில் இனி அடுத்த கிரிக்கெட் போட்டிக்காக ஒரு ஆண்டு ஐபிஎல் வரை காத்திருக்க வேண்டுமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் பெருமளவில் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மூன்று பார்வையாளர்கள் மாடத்தை பயன்படுத்த அனுமதி இல்லாமல் இருந்தது தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்தப் பிரச்சனைகள் முடிவடைந்து புதிய பார்வையாளர்கள் மைதானமும் கட்டப்பட்டு இருக்கிறது. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானம் தற்போது சர்வதேச தரத்திற்கு உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 40,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதிகள் மைதானத்தில் இருக்கின்றன.
இதனால் சென்னை மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ சொந்த மண்ணில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை அண்மையில் அறிவித்தது. இதில் வரும் செப்டம்பர் மாதம் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டெஸ்ட் பெங்களூர்விலும், அக்டோபர் 24ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் புனேவிலும், நவம்பர் ஒன்றாம் தேதி மூன்றாவது டெஸ்ட் மும்பையிலும் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. அது முடிந்தவுடன் மீண்டும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி ஜனவரி 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 25ஆம் தேதி இரண்டாவது டி20 கொல்கத்தாவிலும், ஜனவரி 28ஆம் தேதி மூன்றாவது டி20 ராஜ்கோட்டிலும், ஜனவரி 31-ஆம் தேதி நான்காவது டி20 போட்டி புனேவிலும், பிப்ரவரி 2ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டி மும்பையிலும் நடத்தப்படுகிறது.
இது முடிந்தவுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் போட்டி நாக்பூரிலும், பிப்ரவரி 9ஆம் தேதி இரண்டாவது போட்டி கட்டாக்கிலும், பிப்ரவரி 12ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்திலும் நடத்தப்படுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்ல இருக்கின்றது.