டோணி நீங்கலாக இந்திய வீரர்கள் இலங்கை பயணம்
சென்னை: இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று கொழும்பு புறப்பட்டுச் சென்றது.
அதேசமயம், கேப்டன் டோணி மட்டும் அவர்களுடன் செல்லவில்லை. அவருக்கு இன்று இரவு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் பாராட்டு விழா நடத்துகிறது. அதில் அவர் பங்கேற்கிறார். அப்போது அவருக்கு கெளரவ உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.
3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் மோதவுள்ளன. வருகிற 18ம் தேதி காலே நகரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று இரவு கொழும்பு செல்கிறது. இதற்காக நேற்று காலை முதலே இந்திய அணி வீரர்கள் சென்னை வரத் தொடங்கினர்.
கேப்டன் டோணி தனது மனைவி சாக்ஷி சிங்குடன் வந்து சேர்ந்தார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்உரிமையாளரும், கிரிக்கெட் வாரிய செயலாளருமான சீனிவாசன் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இதேபோல சச்சின் டெண்டுல்கர், ராகுல்டிராவிட் உள்ளிட்ட வீரர்களும் நேற்றே வந்து சேர்ந்தனர். அனைத்து வீரர்களும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று பிற்பகலில் அவர்கள் இலங்கை புறப்பட்டுச் சென்றனர். டோணி நாளை கொழும்பு செல்கிறார்.


Click it and Unblock the Notifications