இந்தூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிக்ஸ் அடிப்பதில் உலகின் முதல் அணியாக புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் "தார் ரோடு" போல இருக்கும் என்ற விமர்சனம் உண்டு. பிட்ச் தட்டையாக இருக்கும் என்பதால் பந்துவீச்சை கணித்து ஆடுவது எளிதாக இருக்கும்.
போதாக்குறைக்கு இந்த ஆடுகளத்தின் பவுண்டரி நீளம் ஒரு பக்கம் 55 மீட்டரும், இன்னொரு பக்கம் 61 மீட்டரும் தான். அதனால், எளிதாக ஃபோர், சிக்ஸ் அடிக்க முடியும். இதற்கு முன் இங்கு நடந்த போட்டிகளில் 300 ரன்களை தாண்டுவது என்பது எளிதான காரியமாக இருந்தது.
ஆடுகளத்தின் தன்மையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி பேட்டிங்கில் அதிரடி காட்டியது. துவக்கம் முதலே ஃபோர் மற்றும் சிக்ஸர்கள் பறந்தன. இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.
இந்த இன்னிங்க்ஸில் இந்திய அணி 18 சிக்ஸர்கள் அடித்து இருந்தது. அதில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே 6 சிக்ஸர்களை அடித்து இருந்தார். அவர் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை அடித்தது இந்தப் போட்டியின் உச்சகட்டமாக இருந்தது. சுப்மன் கில் 4, ஸ்ரேயாஸ் ஐயர் 3, ராகுல் 3, இஷான் கிஷன் 2 சிக்ஸர்கள் அடித்து இருந்தனர்.
இந்த 18 சிக்ஸர்கள் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் 3000 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை கடந்தது. ஏற்கனவே, இந்திய அணிதான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. தற்போது இந்தியா 3007 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறது.
இந்த அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 2953 சிக்ஸர்கள் அடித்துள்ளது. பாகிஸ்தான் 2566 சிக்ஸர்களும், ஆஸ்திரேலியா 2476 சிக்ஸர்களும் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.