மெல்போர்ன்: பிட்ச் ஹார்ட ஆக இருப்பதால் டேல் ஸ்டெயினுக்கு இன்று குஷியான நாளாக இருக்கும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு கங்குலி கூறியிருந்தார். ஆனால் இந்தியர்கள் இன்று தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை பிரித்தெடுத்து விட்டனர்.
டேல் ஸ்டெயின், பிலான்டர் என எந்த வேகப் பந்து வீச்சாளரும் இந்தியாவின் பேட்டிங்கை சீர்குலைக்க முடியாமல் போய் விட்டது. ஆரம்பத்தில் பதுங்கிய இந்தியா பின்னர் புலி போல பாய்ந்ததால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுதான் நிலை குலைந்து போய் விட்டது.
முதலில் தவான் - கோஹ்லி அருமையான ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கொடுத்தனர். அடுத்து தவான் - ரஹானே இணைந்து மிரட்டினர்.

ஸ்டெயின் தனது முதல் ஓவரை மெய்டனாக்கியபோதிலும் கூட அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. போகப் போக பிரித்தெடுத்து விட்டார் ஷிகர் தவான். இந்தியாவின் முதல் பவுண்டரியை விளாசியவர் தவான்தான். 2வது ஓவரில்தான் தனது கணக்கைத் தொடங்கியது இந்தியா. பிலான்டரின் அந்த ஓவரில் இந்தியா 5 ரன்களை எடுத்தது.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பதம் பார்த்து விட்டனர் இந்திய வீரர்கள். குறிப்பாக வேயன் பர்னல், மார்னி மார்க்கல், ஸ்டெயின், இம்ரான் தாஹிர் ஆகியோரின் பந்து வீச்சு கிழித்தெடுக்கப்பட்டது.

பர்னல் 9 ஓவர்கள் வீசி 85 ரன்களை அள்ளிக் கொடுத்தார். மார்க்கலின் பங்கு 10 ஓவர்களுக்கு 59 ரன்களாகும். ஸ்டெயின் பங்கு 10 ஓவர்கள், ஒரு மெய்டன், 55 ரன்கள். பிலான்டர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
மார்னி மார்க்கலுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன. ஸ்டெயின், தாஹிர், பர்னல் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.